தடம் மாறியது பஸ்; தப்பினர் பயணியர்

0
6

போத்தனூர்; கோவை, மதுக்கரையை கடந்து அரசு டவுன் பஸ் (தடம் எண்: 48) ஒன்று, 76 பயணியருடன் குனியமுத்தூர் நோக்கி. பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை வந்துகொண்டிருந்தது. காந்தி நகரை அடுத்து மைல்கல் போலீஸ் சோதனை சாவடிக்கு முன்பாக இரு சக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையின் வலதுபுறம் வந்தது. இதனை கண்ட டிரைவர் சின்னதடாகத்தை சேர்ந்த சுகனேஸ்வர் பஸ்சை வலதுபுறம் திருப்பினார். எதிர்பாராவிதமாக பஸ் சாலையின் மையத்தடுப்பின் மீது ஏறி நின்றது.

அதிர்ச்சியடைந்த பயணியர் பஸ்சிலிருந்து இறங்கினர். இதனால் அவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணியர் அவ்வழியே வந்த பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுக்கரை போலீசார் விசாரணையில், வேலந்தாவளத்திலிருந்து காலை, 7:00 மணிக்கு புறப்பட்ட பஸ், 7:40 மணிக்கு மேற்குறிப்பிட்ட இடத்தில் வரும்போது, இரு சக்கர வாகன ஓட்டியால் விபத்து ஏற்பட்டதும், அதிர்ஷ்டவசமாக பயணியர் காயமின்றி தப்பியதும் தெரிந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.