ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வை ஏற்க முடியாது! மா.கம்யூ., – இ.கம்யூ. கவுன்சிலர்கள் திட்ட வட்டம்

0
6

கோவை; ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வை ஏற்க முடியாது என்று மா.கம்யூ., – இ.கம்யூ., கவுன்சிலர்கள் திட்டவட்டமாக கூறினார்கள்

கோவை மாநகராட்சியில், 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஆறு மாதத்துக்குள் வரி செலுத்த தவறினால், ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை, 6 சதவீதம் வரி உயர்த்தப்படுகிறது.

‘ட்ரோன் சர்வே’ மூலம் கட்டடங்கள் மறுஅளவீடு செய்து, வரித்தொகை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. மேலும், ஜி.எஸ்.டி., எண் மற்றும் மின் வாரிய வணிக இணைப்புகளை பெற்று, கட்டடங்களின் சொத்து வரி வகை மாற்றம் செய்யப்பட்டது. மாநகராட்சியின் இந்நடவடிக்கை பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள், கடந்த மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் கோஷம் எழுப்பி, வெளிநடப்பு செய்தனர். கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்யாவிட்டால், தொழில்துறையினருடன் ஆலோசித்து அடுத்த கட்ட போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இச்சூழலில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஆய்வு கூட்டத்துக்கு வந்திருந்த, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, ”ட்ரோன் சர்வே நிறுத்தப்பட்டுள்ளது; ஒரு சதவீத அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது. ஆண்டுக்கு ஆறு சதவீத வரி உயர்வு மட்டும் அமலில் இருக்கும்,” என்றார்.

இதுதொடர்பாக, மாநகராட்சி கவுன்சிலர்கள் கூறியதாவது:

மா.கம்யூ., கவுன்சில் குழு தலைவர் ராமமூர்த்தி: ‘ட்ரோன் சர்வே’ நிறுத்தம் வரவேற்கக் கூடியது. ஒரு சதவீத அபராதம் நிறுத்தம் என்பது உடனடியாக அமலுக்கு வர வேண்டும். ம.ந.க., வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன சின்ன வீடுகளில் தங்கப்பட்டறைகள் செயல்படுகின்றன. மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் வீடுகளில் குடிசை தொழில் மேற்கொள்ளப்படுகிறது. அக்கட்டடங்களை வணிக பகுதியாக வகை மாற்றம் செய்திருக்கின்றனர். அது தவறு. வீட்டுக்கான வரி விதிப்பே தொடர வேண்டும். ஆண்டுதோறும் ஆறு சதவீத வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். வீட்டுக்கு முன் சின்னதாக பெட்டிக்கடை நடத்துகிறார்கள்; அவ்வீட்டை வணிகமாக மாற்றுவது தவறு.

இ.கம்யூ., கவுன்சில் குழு தலைவர் சாந்தி: அமைச்சர் நேரு அறிவிப்பு ஏற்புடையதல்ல; கண்துடைப்பு நடவடிக்கை. ஒரு சதவீத அபராதம் ரத்து என்பது மட்டும் ஏற்புடையது. ஆண்டுக்கு ஆறு சதவீதம் வரி உயர்வு என்பது மக்களை ரொம்பவே சிரமப்படுத்தும். ஏற்கனவே, 100 சதவீதம் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு, 2,000 ரூபாய் செலுத்தி வந்தவருக்கு, 4,000 ரூபாய் மட்டுமே உயர்ந்திருக்க வேண்டும்; ஆனால், பல மடங்கு உயர்ந்துள்ளது.

இ.கம்யூ., கட்சி அலுவலகங்களுக்கு, 16,000 ரூபாய் வரி செலுத்தி வந்தோம்; இப்போது, 47 ஆயிரம் ரூபாய் செலுத்துகிறோம். பொதுமக்களின் நிலையை நினைத்து பாருங்கள். சொத்து வரியை, 100 சதவீதமாக உயர்த்தியதை, பாதியாக குறைக்க வேண்டும்.

அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன்: சொத்து வரிக்கு அபராதம் ரத்து என அமைச்சர் அறிவிப்பதுபோல் அறிவிக்கிறார். இதை இங்குள்ள மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்த மாட்டார்கள் என்பதே எங்கள் கருத்து. ஏனெனில், 3,500 சதுரடிக்கு மேலாக கட்டப்படும் கட்டடங்களுக்கான வரைபட அனுமதி பெற, அரசு உத்தரவிடுவதற்கு முன்பாகவே, சதுரடிக்கு, 88 ரூபாய் வீதம் வசூலித்தனர். சில நாட்களுக்கு முன்பே அரசாணை வெளியானது. இதுநாள் வரை வசூலித்த தொகையை, மக்களுக்கு திருப்பித் தரப்படுமா.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.