கோவை; கோவை அரசு மருத்துவமனையில் சடலங்களை பெற்றுச்செல்ல வரும் உறவினர்கள் அமர்வதற்கும், பிற அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 7000 முதல் 8000 பேர் புற நோயாளிகளாகவும், 2500 பேர் உள் நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
இங்கு, எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் சடலங்கள் சில மருத்துவமனை செயல்பாடுகளுக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
v
சந்தேக இறப்புகளாக இருப்பின் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் வழங்கப்படுகிறது, குறைந்தபட்சம் 3-4 மணி நேரத்தில் இருந்து ஒரு நாள் வரை கூட இறந்தவர்களின் சடலங்களை பெற அரசு மருத்துவமனையின் பின்புற நுழைவாயிலில் காத்துக்கிடக்கின்றனர்.
சடலங்கள் பெற்றுக்கொள்ளும் இடங்களில், போதிய கழிவறை, தண்ணீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. சட்ட மருத்துவத்துறை கட்டடத்தின் கார் பார்க்கிங் பகுதியில், இருக்கை வசதி போதுமானதாக இன்றி, மக்கள் வெயிலில் பல மணி நேரம் நிற்கும் சூழல் உள்ளது. வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அமர இடமின்றியும், அடிப்படை வசதி இன்றியும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராதா என்பவர் கூறுகையில், ” ஐந்து மணி நேரமாக காத்திருக்கின்றோம். டாய்லெட் செல்லவேண்டும் என்றால், வலது பக்கம் உள்ள கேட் வழியாக உள்ளே சென்றால் இருக்கிறது. ஆனால், அதை பூட்டியே வைத்து இருப்பதால், டாய்லெட் கூட செல்ல முடியவில்லை. தண்ணீர் வெளியில் இருந்து தான் வாங்கி வருகிறோம், ” என்றார்.
கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ”ஒரு சடலத்தை பெற பலர் வந்துவிடுவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து, கட்டாயம் ஆலோசித்து தேவையான வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.