கோவையில் இன்புளூயன்சா பாதிப்பு கண்காணிப்பு; 89 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அறிவுறுத்தல்

0
5

கோவை; கோவையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இன்புளூயன்சா பாதிப்பு குறித்து கண்காணிக்க உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக பனி, மழைக்காலங்களில் அதிக தொற்று பாதிப்புகள் ஏற்படும். தற்போது வெயில் தாக்கம் அதிகரித்தும் மாநிலம் முழுவதும் இன்புளூயன்சா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இன்புளூயன்சா பாதிப்பு சாதாரண காய்ச்சல், இருமல், சளி போன்றவையே அறிகுறிகளாக உள்ளன. இப்பாதிப்பு தீவிரமடைந்து, மூச்சு திணறல் பிரச்னை இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டியது, அவசியம்.

கோவையில், கர்ப்பிணிகள், குழந்தைகள், பிற இணை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டவர்கள் மற்றும் முதியோர் இதற்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ” இன்புளூயன்சா காய்ச்சல் கண்காணிப்பு குறித்து கோவையில், 89 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். இப்பாதிப்பு குறித்து, எண்ணிக்கைக்கள் பதிவு செய்யப்படுவதில்லை. தொடர்ந்து கண்காணிப்பு, விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. பொது இடங்களில் மாஸ்க் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்புளூயன்சா வைரஸ் பல பிரிவுகள் உள்ளன அதில். ஹெச்1 என்1 இன்புளூயன்சா பாதிப்பு கோவையில், பதிவாகவில்லை,” என்றார்.