வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உடல் சோர்வு என்பது அனைத்து தரப்பினர் மத்தியிலும் காணப்படுகிறது. குறிப்பாக, நீர்ச்சத்து குறைவு இச்சமயங்களில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்திவிடுகிறது.
அதிலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, உடலில் நீர்ச்சத்து குறைபாடு இயல்பாகவே இருக்கும் சூழலில், மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முதியோருக்கு உடலின் தசைகளின் அடர்த்தி குறைவாக இருக்கும். பொதுவாக தசையில் தான் நீர்ச்சத்து அதிக அளவில் இருக்கும். வயது அதிகரிக்க, அதிகரிக்க தசை குறைகிறது. ஆகவே தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் நடமாட்டம் குறைந்து விடுவதால், உடலில் இருந்து வியர்வை வெளியாவதில்லை. இதனால் தாகம் எடுப்பதில்லை என்பதால், தண்ணீர் குடிப்பதில்லை.
கோடையில் கவனம்
கோடையில் உடல் நடமாட்டம் இல்லாவிட்டாலும், வெப்பம் காரணமாக கண்ணுக்குத் தெரியாமலே அதிகளவில் நீர் வெளியேறும். தண்ணீர் பருகும் அளவு குறையும் போது, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.
தசை பலவீனம், ஊக்கம் குறைதல், வாய் உலர்வு, தலைவலி, மயக்கம், ரத்த அழுத்தம், இதய துடிப்பு அதிகரித்தல், உடல் சோர்வு, குழப்பம் போன்றவை இதன் அறிகுறிகள்.
அருகில் உள்ளவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதை நினைவுபடுத்த வேண்டியது அவசியம். நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், பழச்சாறுகள், கூழ், மோர் போன்றவற்றை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கோவை அரசு மருத்துவக்கல்லுாரி டீன் நிர்மலா கூறுகையில், ”வயதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. சோம்பேறித்தனத்தை தவிர்த்து, ஆக்டிவ்வான வாழ்க்கை முறையை பின்பற்றினால், பல்வேறு சிக்கல்களை தவிர்க்கலாம். 60 வயதுக்கு மேல் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதற்கு ஏற்ப, நல்ல சத்தான உணவு, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
”புத்தகம், பேப்பர் படிக்கும் பழக்கம் மறதி உள்ளிட்ட பாதிப்புகள் வராமல் தடுக்கும். உடலில் நீர் இழப்பு ஏற்படும் போது, தாதுச்சத்துக்கள் குறைந்து, சீறுநீரகம், இதயம் என அனைத்து உறுப்புகளையும் பாதித்துவிடும்
நாள் ஒன்றுக்கு, 3 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும். வெயில் அதிகம் உள்ள நேரத்தில் வாக்கிங் செல்வதை தவிர்த்து, மாலையில் செல்லலாம். இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும். தண்ணீர் தேவையான அளவு பருக வேண்டியது அவசியம்,” என்றார்.