கோவை: மாநகரில் நடக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்க, 732 ரவுடிகளை, போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாநகரில் திருட்டு, வழிப்பறி, அடிதடி, கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். எனினும், பல்வேறு காரணங்களுக்காக அவர்களுக்கு, நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கப்படுகிறது.
சிறையில் இருந்து வெளிவரும் ரவுடிகள் சிலர், மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனால், போலீசார் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப ரவுடிகள், ஏ பிளஸ், ஏ,பி,சி என வகைப்படுத்தப்படுகின்றனர். ஒருங்கிணைந்த குற்றங்களை செய்வோர் தனியாக உள்ளனர்.
இவர்களில், அந்தந்த வகைகளை சேர்ந்த ரவுடிகளில் சிலர், ஜாமினில் வெளியே உள்ளனர்.
அவர்களால் மாநகரின் அமைதி கெட்டு விடாமல் இருக்க, போலீசார் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
தற்போது, மாநகரில் 13 ஏ பிளஸ் ரவுடிகள் உள்ளனர். அதில் ஆறு பேர் சிறையிலும், ஏழு பேர் வெளியிலும் உள்ளனர். ஏ வகையில் உள்ள, 19 ரவுடிகளில் 7 பேர் சிறையிலும், 12 பேர் வெளியிலும் உள்ளனர்.
இது தவிர, பி வகையில் 214 பேரும், சி வகையில் 499 பேரும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளனர். மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், சென்னை மாநகர போலீஸ் சட்டம் 1888, 51-ஏ பிரிவின் கீழ், மாநகரில் அட்டூழியம் செய்து வரும் ரவுடிகளை வெளியேற்றியுள்ளனர்.
அதன் படி முதல் கட்டமாக, கடந்த ஜன., 13ம் தேதி 27 ரவுடிகளை, மாநகரில் இருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த, பிப்., 7ம் தேதி மேலும் 83 ரவுடிகள் வெளியேற, கமிஷனர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், உத்தரவை மீறி மாநகரில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட, இரண்டு ரவுடிகள் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ”மாநகரை அமைதியானதாக வைத்திருக்க, குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு, விரைவாக தண்டனை பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படுகிறது. சிறை சென்ற ரவுடிகள், ஜாமின் பெற்று வெளியில் வந்த பிறகும், அவர்களை கண்காணிப்பு வலையில் வைத்திருக்கிறோம்,” என்றார்.