தபால்துறை தேர்வு விவகாரத்தில் தீர்வு காணப்படும் – அமைச்சர் கே.பாண்டியராஜன் பேட்டி

0
111

இயற்கை மற்றும் வாழ்வியல் குறித்து சபிதா போஜன் எழுதிய ‘நீலமலைப்பூக்காரி’ என்ற புத்தக வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் படுகர் இன பாடலையும் அவர் பாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தோடர், படுகர் இன மொழிகளை மீட்டெடுக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக ஒரு மில்லியன் டாலர் வழங்குமாறு யுனெஸ்கோவிடம் தமிழக அரசு கேட்டுள்ளது. இரு மொழிகளையும் பாதுகாக்க யுனெஸ்கோவிடம் தமிழக அரசு உதவி கேட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல பாறை ஓவியங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. பாறை ஓவியங்களை பாதுகாக்கும் பணி குறித்து தமிழக அரசு அறிவிக்கும். தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் ஓலைச்சுவடி, செப்பேடு, பாறை ஓவியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கீழடி அகழாய்விற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. இருப்பினும் மத்திய அரசின் உதவியை கேட்போம். எந்த ஆண்டும் இல்லாத வகையில் தொல்லியல், கலை பண்பாட்டு துறைக்கு 3 மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தபால் துறை தேர்வில், இந்தி வந்துள்ளதுதான் கேள்விக்குறி?. இதை மாற்ற வேண்டுமென்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. இப்பிரச்சினையில் ஆர்ப்பாட்டம், ஆரவாரம் இல்லாமல் அமைதியாக சாதிப்போம். தபால்துறை தேர்வில் கால்வாசி கேள்வி இந்தியில் கேட்பதில், தமிழக அரசிற்கு உடன்பாடு கிடையாது. இது மாற்றப்படும் என நம்புகிறேன். இந்தி மட்டும் என்பது தவறான நிலைப்பாடு. தமிழக அரசு இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளது. தேசிய கல்வி கொள்கையில் மும்மொழிகள் படிக்க வேண்டுமென்பது ஆய்வுக்குட்பட்டது.
பஸ்சில் இந்தி மொழி குறிப்பு என்பது ஒரு பஸ்சில் மட்டுமே இருந்தது. அதுவும் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. பஸ்சில் இந்தி எழுத்து என்பது கிடையாது.
சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் அகழாய்வு தொடர்பாக பேச உள்ளேன். ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், பாறை ஓவியங்கள் நமது பண்பாட்டை பறைசாற்றும் வகையில் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாறை ஓவியங்கள் சம்பந்தமான பணிக்கு தமிழக அரசு இந்த ஆண்டு நிதி ஒதுக்க உள்ளது. பல பாறை ஓவியங்கள் சங்க காலங்களை கடந்து அதற்கு முன்பாக இருப்பதாக அறிஞர்கள் சொல்கின்றனர். அஜந்தா, எல்லோரா ஓவியங்கள் இருந்தாலும் அவற்றின் தொன்மை 1200 ஆண்டுகள்தான். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பாறை ஓவியங்கள் அதற்கு முன்பாக உள்ளது.
திருவள்ளூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள பாறை ஓவியங்களை ஒருமுகைப்படுத்தி ஆய்வு செய்ய உள்ளோம். ஹார்வர்டில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் இருக்கையில் 6 ஆய்வுகளில் இதை ஒன்றாக எடுக்க கேட்டுள்ளோம். அவர்கள் இதை ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும். கீழடி அகழாய்வு உலகையே உலுக்கியது போல் பல இடங்கள் கொங்கு மண்டலம் உள்பட தமிழகத்தில் உள்ளன. தொல்லியல்துறை இந்த ஆண்டு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பாறை ஓவியங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் என தொன்மையை பறைசாற்றும் வகையில் இருக்கும். தேனி, திருவண்ணாமலை என 2 மாவட்ட அருங்காட்சியகமும், அரியலூர் தொல்லியல் டைனோசர் அருங்காட்சியகமும் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.