பகுதி நேர வேலை வாய்ப்பு மோசடி வலையில் சிக்கி விழிக்கும் இளைஞர்கள்

0
7

கோவை; பகுதி நேர வேலை வாய்ப்பு என கூறி, மோசடி செய்யும் கும்பலிடம் சிக்கி பணத்தை இழக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சமீப காலமாக, ‘கூகுள் ரிவ்யூ’ பதிவிட்டு, ‘5 ஸ்டார்’ ரேட்டிங் அளித்தால் கமிஷன் அளிக்கப்படும் என, மோசடி நபர்கள் வலை விரிக்கின்றனர். அதில் பல நடுத்தர, இரண்டாம் வருமானத்திற்காக வழியை தேடும் பல இளைஞர்கள் சிக்கி, பணத்தை இழக்கின்றனர்.

கோவை, சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த ஆயிஷா சர்மில் ஜகான், 29; தனியார் நிறுவனத்தில் மென்பொருள் இன்ஜி., இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த 7ம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில், முன்னணி ஓட்டல்கள் குறித்து, ‘கூகுள் ரிவ்யூ’ பதிவிட்டால் நல்ல கமிஷன் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல், ஆயிஷா பின்பற்றி சில ஓட்டல், நிறுவனங்களுக்கு ரிவ்யூ பதிவிட்டார். அதற்கான கமிஷன் தொகை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, ‘பேக்கேஜ்’ என்ற பெயரில் முன்பணம் செலுத்தி, ரிவ்யூ செய்யும் முறை குறித்து மோசடி நபர்கள் ஆயிஷாவிடம் தெரிவித்துள்ளனர். அதன் படி, செய்தால் மேலும் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைகாட்டினர்.

முதற்கட்டமாக ஒரு தொகையை செலுத்தி, ரிவ்யூ செய்தார். அதற்காக கமிஷனும் அவரது கணக்கில் வந்தது.

ஆயிஷா மோசடி நபர்கள் அளித்த, வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 5.42 லட்சம் பணத்தை அனுப்பி, ரிவ்யூ செய்து வந்தார்.

ஆனால் அவரால் கமிஷன் பணத்தை, வங்கி கணக்குக்கு மாற்ற முடியவில்லை. வங்கி கணக்கிற்கு மாற்ற மேலும் பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனால், ஆயிஷா மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பணம் கேட்டால் அது மோசடிதான்!

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உங்களிடம் முன்பனம் மற்றும் டெபாசிட் செலுத்த கேட்டால், அது மோசடி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொது மக்களின் ஆசையை வைத்து தான், இது போன்ற மோசடிகளை செய்கின்றனர். நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இது போன்று குறுஞ்செய்திகள், அழைப்புகள் வந்தால் அவற்றை தவிர்க்க வேண்டும்’ என்றார்.