கால்நடைத்துறை அலுவலர்கள்.. களத்தில் வீடு வீடாக கணக்கெடுப்பு! மார்ச் இறுதிக்குள் முடிக்க உத்தரவு

0
9

கோவை; கோவை மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணிகள், 88.07 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மார்ச் மாதத்திற்குள் முடிக்கும் வகையில் களப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கால்நடைக் கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. தேசிய அளவில், 20வது கால்நடை கணக்கெடுப்பு கடந்த, 2019ல் எடுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, 2024 அக்., மாதம், 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி துவங்கியது. இக்கணக்கெடுப்பு முடிவின் படியே, மத்திய அரசு கொள்கை வகுப்பது, நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யும்.

கோவை அனைத்து வருவாய் கிராமங்கள் வாரியாகவும், நகர்புறங்களில் வார்டு வாரியாகவும் கால்நடை கணக்கெடுப்பு பணிகள் கடந்த அக்., மாதம் முதல் நடந்து வருகிறது. அனைத்து வீடுகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள், இறைச்சி மற்றும் முட்டைக்கோழி பண்ணைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கோசாலைகளில் கால்நடைத்துறை அலுவலர்கள் நேரடியாக தகவல் சேகரித்து பிரத்யேக செயலியில் மொபைல் வாயிலாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். இக்கணக்கெடுப்பு பணி, பிப்., மாதத்தில் முடியும் என எதிர்பார்த்த சூழலில், சர்வர் சிக்கல், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தமிழகம் முழுவதும் மார்ச் வரை பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கால்நடைக் கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. தேசிய அளவில், 20வது கால்நடை கணக்கெடுப்பு கடந்த, 2019ல் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து, கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி திட்ட துணை இயக்குனர் சுகுமார் கூறியதாவது:

கோவையில் அனைத்து வீடுகளிலும் கால்நடைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. சராசரியாக, 1,046 கிராமங்களில் 12 லட்சம் வீடுகளில் இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில், எந்த வகை கால்நடை, அதன் வேலைத்திறன், விவசாய தளவாட கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் சேகரிக்கின்றோம்.

இதன் அடிப்படையில் தான், மாதிரி திட்டங்கள் அரசால் வகுக்கப்படுகிறது. தற்போது, வரை 11 லட்சத்து 9 ஆயிரத்து 82 வீடுகளில் கணக்கெடுப்பு பணி முடிவு பெற்றுள்ளது. மொத்தமாக, மாடுகள் 2.59 லட்சம், 39 லட்சத்து 80 ஆயிரம் கோழிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

5,000 வீடுகளுக்கு ஒருவர் வீதம், கணக்கெடுப்பு பணியில் 234 பேர் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை, மருந்துவர் நிலையில், 48 பேரும், 20 துறை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் மாதத்திற்குள் கணக்கெடுப்பு பணிகள் மற்றும் பதிவு பணிகள் நிறைவுபெறும்.

இவ்வாறு, அவர் கூறினார்.