இளநீர் ஐம்பது ரூபாய். .. தேங்காய் 68 ரூபாய் !

0
51

கோவை: ‘தேங்காய்க்கு விலை கிடைக்கவில்லை; ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய அனுமதியுங்கள்’ என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்த காலம் மாறி, தற்போது தேங்காய் மற்றும் இளநீர் விலை உச்சத்தில் பறக்கிறது.

நான்கு தேங்காய், ஐம்பது ரூபாய்க்கு கொடுத்தாலே வாரச்சந்தையில் வாங்க யோசிப்பர். ஐந்தாக கொடுங்கள் என்று, வியாபாரியிடம் கெஞ்சிக்கூத்தாடி பெறுவர்.

ஆனால் இன்றைய நிலைமை தலை கீழ். ஒரு தேங்காய் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் 20 ரூபாய்க்கு குறைவாக கிடைப்பதில்லை. ஒரு கிலோ தேங்காய், 68 ரூபாய்க்கு விற்கிறது. இளநீர் ஒன்றின் விலை, 50 ரூபாயானது. அதே செவ்விளநீரின் விலை ரூ.55க்கு விற்கிறது, அதே ஹைபிரிட் மஞ்சள் மட்டை இளநீர், 65 ரூபாய்க்கு விற்கிறது.

இது குறித்து, தென்னை விவசாயிகளிடம் விசாரித்தோம். விவசாயி ஒருவர் கூறியதாவது:

முன்பு மழை பரவலாக, குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பெய்யும். அப்போது, மழை மரத்தின் மீதுள்ள பூம்பாளைகள் மீது நிற்கும். அந்த மழைக்கு காய்ப்பு நன்றாக இருக்கும். இளநீர் மற்றும் தேங்காய் விளைச்சல் அமோகமாக இருக்கும்.

தற்போது தென்னைமரங்கள், நோய் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை பெய்தால் மொத்தமாக பெய்து தீர்த்து விடுகிறது. மறுமுறை பெய்வதில்லை. அதனால் சுமாரான விளைச்சல் மட்டுமே கிடைக்கிறது.

அத்துடன் டில்லி, மத்தியபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு, பொள்ளாச்சி மற்றும் கோவையிலிருந்து, வாரம் ஒரு லாரி இளநீர் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதனால் உள்ளூரில் செயற்கையான டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான தோட்டங்களில் இளநீராக காய்களை வெட்டி விடுவதால், தேங்காய் விளைச்சல் குறைந்து விட்டது. விலை உயர்வுக்கு இதுதான் காரணம். இவ்வாறு, அவர் கூறினார்