போலீஸ் விழிப்புணர்வு! ஆன்லைனில் போதைப் பொருள் வாங்க கூடாது; சைபர் மோசடி நடந்தால் 1930 அழைக்கலாம்…

0
21

மேட்டுப்பாளையம்; ஆன்லைனில் போதைப்பொருள் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் சாப்ட்வேர் வேலைக்கு ஆன்லைனில் அழைப்பு வந்தால் நம்ப வேண்டாம். சைபர் மோசடி நடந்தால் 1930 அழைக்கலாம்.

சைபர் மோசடிகள் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் தலைமையிலான போலீசார், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் கூறியதாவது:-

ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசை வார்த்தை கூறும் நபர்களை நம்பக்கூடாது. ஆன்லைன் அழைப்புகளை அப்படியே நம்பக்கூடாது. லிங்குகளை கையாளும் போது கவனம் தேவை. போலி லிங்குகளை தொட்டு, சைபர் மோசடியில் சிக்கிகொள்ள வேண்டாம். ஆனலைன் வாயிலாக தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட போதை பொருள்களை வாங்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் சாப்ட்வேர் வேலைக்கு ஆன்லைனில் அழைப்பு வந்தால் நம்ப வேண்டாம். தீர விசாரிக்காமல் இளைஞர்கள் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். சந்தேகம் இருப்பின் போலீஸ் ஸ்டேஷனை அணுகலாம். சைபர் மோசடி நடந்தால் 1930 அழைக்கவும். இதுதொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு சைபர் கிரைம்களில் நடக்கும் அனைத்து விதமான மோசடிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டு இளைஞர்களை குறிவைத்து, ஆன்லைன் வாயிலாக பல போலி ஏஜன்ட்கள் வாயிலாக சைபர் மோசடி நடைபெறுகிறது. சைபர் கிரைம் மோசடி கும்பல்கள் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளதா எனவும் தீவிரமாக கண்காணித்து

வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், ”காரமடை வட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள பல நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு குறிப்பாக 8,9,10,11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் மோசடிகள் தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

போலீசாரின் அறிவுரைகள் தொடர்பாகவும் அவற்றை பின்பற்றவும் அறிவுறுத்தி வருகிறோம். பள்ளி வரும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக செல்போன்களை எடுத்து வரக்கூடாது. இதற்கு தடை விதித்துள்ளோம்,” என்றனர்.—