பங்கு வர்த்தக செயலியில் ரூ.15.50 லட்சம் மோசடி

0
24

கோவை; ஆன்லைன் பங்கு வர்த்தக செயலி வாயிலாக ரூ.15.50 லட்சம் இழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த டாக்டர் கார்த்திக், 44. ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இணையதளத்தில் வந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட இணைப்பை ‘கிளிக்’ செய்தார். இதையடுத்து அவரது மொபைல் எண் வாட்ஸ்அப் குழு ஒன்றில் இணைக்கப்பட்டது.

குழுவில் பங்குகளை வாங்குவது, விற்பது குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டன. இதை நம்பி கார்த்திக் அந்த குழுவில் இருந்த ஆன்லைன் பங்கு வர்த்தக மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்தார். இந்த ஆப் வாயிலாக, ஒன்பது தவணைகளில், ரூ.15.50 லட்சத்தை முதலீடு செய்தார். அவர் கணக்கில் ரூ.25.86 லட்சம் இருப்பதாக காட்டப்பட்டது. அத்தொகையை எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை. இதையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவரது புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.