பொள்ளாச்சியில் பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா ஒரு வாரத்தில் உறுதியாகும் ! மக்கள் அலைச்சல் தவிர்க்க அதிகாரிகள் ஆயத்தம்.

0
71

பொள்ளாச்சி; பொள்ளாச்சி தபால் அலுவலகத்தில், பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா (பாஸ்போர்ட் சேவை மையம்) அமைக்க, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அஞ்சல் அலுவலகம் இடம் ஒதுக்கீடு செய்த பின், அதிகாரிகள் ஆய்வு செய்து, மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என, பாஸ்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி வருவாய் கோட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட நான்கு தாலுகாக்களை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. கோவை மாவட்டத்தில், இரண்டாவது பெரிய நகரமாகவும், லோக்சபா தொகுதியில் தலைமையகமாக பொள்ளாச்சி உள்ளது.

பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் வசிக்கும் மக்கள், பாஸ்போர்ட் சேவைகளுக்காக கோவைக்கு செல்ல வேண்டியதுள்ளது.வால்பாறையில் இருந்து, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு செல்ல, நான்கு முதல், ஐந்து மணி நேரமாகிறது.

மேலும், 40 கொண்டை ஊசி வளைவு கொண்ட மலைப்பாதை என்பதால், மக்கள் மிகுந்த அலைச்சலுக்கு ஆளாவதுடன், நேரம் மற்றும் பண விரயம் ஏற்படுகிறது. இதுபோன்று, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதி மக்கள், கோவைக்கு செல்வதிலும், போக்குவரத்து சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பொள்ளாச்சி பகுதியில், பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, பொள்ளாச்சி நகர பா.ஜ., சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டது. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுப்பிய பதில் மனுவில், ‘இந்தியாவில் பாஸ்போர்ட் சேவை மையம் இல்லாத ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும், மையம் அமைக்க மத்திய தபால் துறையின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் இடம் ஒதுக்கீடு செய்து தந்ததும், பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஆழியாறு தபால் அலுவலகத்தில், பாஸ்போர்ட் கேந்த்ரா அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆழியாறு தபால் அலுவலகத்துக்கு கொண்டு சென்றால், பொதுமக்களுக்கு பயன் இருக்காது.

எனவே, பொள்ளாச்சி நகரப் பகுதியிலேயே பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்க வேண்டும் என நகர பா.ஜ., தலைவர் பரமகுரு மற்றும் பா.ஜ., விவசாய அணி மாநில திட்ட பொறுப்பாளர் விஜயகுமார் ஆகியோர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

இதற்கிடையே, பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்திலேயே பாஸ்போர்ட் கேந்த்ரா அலுவலகம் திறக்க இடம் கேட்டு, பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள், தபால் துறையிடம் கேட்டுள்ளனர்.

பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தின் கீழ் பகுதியில் மையம் அமைக்க ஆயத்தப்பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அஞ்சல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் கேந்த்ரா துவங்க இடம் கேட்டுள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்த பின் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும்,’ என்றனர்.

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கோவை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், பாஸ்போர்ட் கேந்த்ரா அலுவலகம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதில், பொள்ளாச்சி தபால் அலுவலகத்தில் இடம் கிடைக்காததால் ஆழியாறு பகுதியில் துவங்க திட்டமிடப்பட்டது.தற்போது, மீண்டும் பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்திலேயே இந்த அலுவலகம் துவங்க தபால் துறை அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது. இடம் ஒதுக்குவது குறித்து ஒரு வாரத்துக்குள் அதிகாரிகள் உறுதி செய்த பின், முழுவிபரமும் தெரிவிக்கப்படும்.பொள்ளாச்சியில் அலுவலகம் துவங்கிய பின், பாஸ்போர்ட் புதுப்பித்தல், புதியதாக விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகளை இங்கேயே மேற்கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.