எக்குத்தப்பாக செயல்படும் கம்ப்யூட்டரால் தப்பு தப்பாக அனுப்பப்படும் எ ஸ்.எம்.எஸ்., மாநகராட்சிக்கு வரி செலுத்துவோர் அதிர்ச்சி

0
108

கோவை; கோவை மாநகராட்சிக்கு ஏற்கனவே சொத்து வரி செலுத்தியவர்களுக்கு, நிலுவைத் தொகை இல்லாதபோதிலும், நிலுவைத் தொகை என குறிப்பிட்டு, எஸ்.எம்.எஸ்., அனுப்புவதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு, ஆறு மாதத்துக்கு ஒரு முறை சொத்து வரி செலுத்த வேண்டும். 2024-25ம் நிதியாண்டு வரும் மார்ச் 31ல் முடிகிறது. இன்னும், 200 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க வேண்டியிருக்கிறது. அதனால், வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி கம்ப்யூட்டரில், வரி விதிப்புதாரர்களின் பெயரில் பதிவாகியுள்ள மொபைல் போன் எண்களுக்கு, நிலுவைத்தொகை குறிப்பிட்டு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது.

அவ்வகையில், கணபதி வி.ஜி.ராவ் நகரில், 89ம் எண்ணுள்ள வீட்டில் வசிக்கும், மின்வாரிய முன்னாள் அதிகாரி மனோகரன் மொபைல் போன் எண்ணுக்கு, 900 கோடி ரூபாய் நிலுவை இருப்பதாக எஸ்.எம்.எஸ்., அனுப்பியதால் அவர், அதிர்ச்சி அடைந்தார்

இதேபோல், ஏராளமான வரி விதிப்புதாரர்களுக்கு, தவறான குறுஞ்செய்தி சென்றிருக்கிறது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டனர்.

தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தபோது, நிலுவை தொகை குறிப்பிட வேண்டிய இடத்தில், தவறுதலாக மொபைல் எண் அச்சாகி இருப்பதும், ஏற்கனவே சொத்து வரி செலுத்தியவர்களுக்கும், எஸ்.எம்.எஸ்., சென்றிருப்பதும் தெரியவந்தது.

தொழில்நுட்ப தவறு நடந்திருப்பதை கண்டுபிடித்ததும், மாநகராட்சியில் இருந்து வருத்தம் தெரிவித்து, மீண்டும் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டது.

மாநகராட்சி கம்ப்யூட்டரில், வரி விதிப்புதாரர்களின் பெயரில் பதிவேற்றம் செய்துள்ள ஏராளமான மொபைல் போன் எண்கள் தவறானதாக இருப்பதும் தெரியவந்தது.

நிலுவை என எஸ்.எம்.எஸ்.,’

மின்வாரிய முன்னாள் அதிகாரி மனோகரன் கூறுகையில், ”மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை ஜன., மாதமே செலுத்தி விட்டேன். ஆனால், நிலுவை இருப்பதாக, எஸ்.எம்.எஸ்., வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்டுள்ள சொத்து வரி விதிப்பு எண் என்னுடையதல்ல. குரியச்சன் லுாயிஸ் என்பவர், பக்கத்துக்கு வீட்டுக்காரர். அவரது மொபைல் போனுக்கு அனுப்ப வேண்டிய எஸ்.எம்.எஸ்., என்னுடைய எண்ணுக்கு வந்திருக்கிறது,” என்றார்.