பொள்ளாச்சி; பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி ரயில் வழித்தடங்கள், அகல ரயில் பாதையாக மேம்படுத்தப்பட்டு, 2014ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. பொள்ளாச்சி – கோவை வழித்தடத்தில், பொள்ளாச்சி – கோவைக்கு காலை மற்றும் மாலை நேரத்திலும், மதுரை – கோவை ரயில், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
பாலக்காடு – திண்டுக்கல் ரயில் பாதையில், திருச்செந்துார் ரயில், திருவனந்தபுரம் -மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தினமும், ஆயிரக்கணக்கான பயணியர், இந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்கின்றனர். ஸ்டேஷனுக்கு வெளியே பயணியர் வசதிக்காக, இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான, ‘பார்க்கிங்’ வசதியும் உள்ளது
ஆனால், ஸ்டேஷன் வளாகம், பிளாட்பார்ம், பிளாட்பார்ம்களை கடக்க உதவும் மேம்பாலம் என, எந்தவொரு இடத்திலும், இது வரை கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் கூட, குற்றத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
ரயில்வே பயணியர் மற்றும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், பயணியர் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அதிநவீன ‘நைட் விஷன்’ கேமராக்களை, குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
வேலுார் அருகே, ஓடும் ரயிலில் கர்ப்பிணிணை தள்ளி விட்ட சம்பவத்தையடுத்து, ரயில்வே ஸ்டேஷன்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷன்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.
ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறியதாவது:
ரயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் உள்ள புதுநகரம், கொல்லங்கோடு, முதலமடை, மீனாட்சிபுரம் பிரிவு, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன்களில் மொத்தம், 10 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, எட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதே போன்று, பொள்ளாச்சியில், 12 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது.
தற்போது, ரயில்வே ஸ்டேஷன் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளும் நடக்கும். மார்ச் மாதத்துக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.