ஆவின் முகவர்கள் விற்பனை புள்ளியில் தனியார் பால் விற்பனை செய்தால் முகவர் உரிமம் ரத்து

0
24

கோவை, பிப். 11: கோவை மாவட்டம் முழுவதும் ஆவின் மூலம் தினமும் 2.10 லட்சம் லிட்டர் பால், 700 ஆவின் பால் முகவர்கள் மூலம் பல்வேறு கட்ட தரப்பரிசோதனைக்கு பின் நுகர்வோருக்கு தினமும் விநியோகம் செய்யப்படுகிறது. முகவர்கள் அடுத்தநாள் விற்பனைக்கு தேவையான பாலுக்கு முந்தைய நாளே பாலுக்கான தொகையை முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலமாக செலுத்தி கேட்பு பட்டியலை ஒன்றியத்தில் வழங்குகின்றன

இதையடுத்து, முவர்களிடம் இருந்து பெறப்படும் கேட்பு பட்டியல் அடிப்படையில் ஒன்றியத்தில் பால் பாக்கெட் பேக்கிங் செய்து முகவர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையை அதிகரிக்க தற்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் உள்ள ஒரு சில தனியார் பால் நிறுவனங்கள், ஆவின் நிறுவன முகவர்கள் மூலம் தனியார் பால் மற்றும் பால் உபபொருட்களை விற்பனை செய்து வருவது கள ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனை தடுக்க ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆவின் மூலம் சிறப்பு கள ஆய்வு குழு நியமனம் செய்யப்பட்டு கள ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, ஆவின் முகவர்கள் தங்களின் விற்பனை புள்ளியில் (விற்பனை செய்யும் இடத்தில்) தனியார் பால் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட முகவரின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என ஆவின் பொதுமேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.