நம் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து, நிற்காமல் ஓடிய இதயமும் சற்று தடுமாறும் நேரம் நம் முதுமை காலம். அச்சமயத்தில்,சின்ன சின்ன அறிகுறிகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்
இதுகுறித்து, அரசு மருத்துவமனை இருதயத்துறை தலைவர் டாக்டர் நம்பிராஜன் கூறியதாவது:
சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்பு உள்ளவர்களுக்கு இருதய நோய்கள் வர வாய்ப்புகள் மிக அதிகம். மாரடைப்பு, இதய செயலிழப்பு , ரத்தத்தை உந்தி தள்ளும் திறன் குறைதல், பல்ஸ் அதிகமாகுதல், இதய துடிப்பு அதிகரித்தல், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளுக்கு மருந்து டாக்டர்கள் அறிவுறுத்தியபடி தவறாமல் எடுக்கவேண்டும். 60 வயதை கடந்தவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இ.சி.ஜி., எக்கோ பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். தேவைப்பட்டால், இருதய துடிப்புபரிசோதனையும் செய்துகொள்ளவேண்டும்.
இணை நோய்கள் இருப்பது தெரிந்தாலே உணவு பழக்க வழக்கத்தில் சரியான மாற்றங்களை முன்பே ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். சர்க்கரை போன்று வெள்ளை நிறத்தில் உள்ள அனைத்தும் தவிர்த்து கொள்ளவேண்டும். எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவேண்டும். கீரை, காய்கறி போன்ற சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் ஓர் இடத்திலேயே அமர்ந்து இருப்பது பல சிக்கல்களை ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும், நடைபயிற்சி செய்யலாம். இருக்கைகளில் அமர்ந்துகொண்டே கை, கால்களை அசைத்து உடற்பயிற்சிகளை செய்ய முடியும். சரியான உணவு பழக்கவழக்கமும், உடற்பயிற்சியும் இருதய பாதிப்பில் இருந்து நம்மை காக்கும்
மாரடைப்பு வரும் சூழலில், ‘லோடிங் டோஸ்’ பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இம்மருந்தை வாங்கி வைத்துக்கொள்ளும் நபர்கள் கட்டாயம் இதை எவ்வாறு, யாருக்கு பயன்படுத்தவேண்டும் என்ற புரிதலுடன் இருக்கவேண்டியது அவசியம். உயிர்காக்கும் இம்மருந்தை புரிதலுடன் பயன்படுத்தவேண்டியது மிக அவசியம். சாதாரண நெஞ்சுவலிக்கும், மாரடைப்புக்கும் வேறுபாடுகள் உள்ளன. அருகில் உள்ள மருத்துவ பணியாளர்கள் அல்லது நீங்கள் ரெகுலராக பார்க்கும் டாக்டருக்கு போன் செய்து சூழலை சொல்லி, அதன் பின்னர் கூட இம்மருந்தை எடுத்துக்கொள்வது சிறந்தது.
இவ்வாறு, அவர் கூறினார்.