கோவை; ”ஹிந்தியை தெரிந்து கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ எவ்வித தடையும் இல்லை,” என, கோவையில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்
கோவை குமரகுரு கல்லுாரியில், தமிழ் ஆசிரியர் மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லுாரி, மதுரை தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தின. தமிழ்வளர்ச்சி துறை இயக்குனர் அருள் வரவேற்றார். தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், துணை தலைவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துவக்க நிகழ்ச்சிக்கு பின், கோவையில் நிருபர்களிடம் தமிழ்நாடு செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
பிறமொழியின் ஆதிக்கத்தால், தமிழில் இடைவெளி ஏற்படுகிறது. அதை தடுக்க மொழிக்கு புத்தாக்கம், ஆசிரியர்கள், மாணவர்கள் வழியாக நடத்தப்படுகிறது. தமிழ் வளர்ச்சி துறையில், தமிழ் இலக்கியம் இளங்கலை படித்தவர்கள், தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் முதல் முறையாக உதவி இயக்குனர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்.
தமிழில் பெயர் பலகைகள் வைக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு வர வேண்டும். வணிக நிறுவனங்களுடன் பேசி உள்ளோம். தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை வழியாக நடவடிக்கை எடுக்கப்படும். நம் தாய்மொழி என்ற அங்கீகாரம் இருக்க வேண்டும். பிற மொழி இருப்பதில் தவறு இல்லை.
ஹிந்தி கற்றுக் கொள்ளவோ, தெரிந்து கொள்ளவோ எவ்வித தடையும் இல்லை. அரசோ, தி.மு.க.,வோ அதில் தலையிடவில்லை. தமிழ் மொழி உரிய அங்கீகாரம் பெற வேண்டும் என்பதே நோக்கம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்