பொள்ளாச்சி – கோவை இடையே ரயிலின் வேகத்தை அதிகரிக்கணும்! நடவடிக்கை எடுக்க பயணியர் எதிர்பார்ப்பு

0
56

பொள்ளாச்சி: ‘மதுரை – கோவை ரயில், பொள்ளாச்சி வழியாக கோவைக்கு, ஒரு மணி நேரம், 40 நிமிடம் என ஆமை வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேகத்தை அதிகரிக்க வேண்டும்,’ என, ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தினர்.

பொள்ளாச்சி – கோவை வழித்தடத்தில், பொள்ளாச்சி – கோவைக்கு காலை மற்றும் மாலை நேரத்திலும், மதுரை – கோவை ரயில், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பாலக்காடு – திண்டுக்கல் ரயில் பாதையில், திருச்செந்துார் ரயில், திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், மதுரையில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயில், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு முன்கூட்டியே சென்றால், மேட்டுப்பாளையம் ரயிலை பிடிக்க முடியும் என, பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது: மதுரையில் இருந்து காலை, 7:10 மணிக்கு கிளம்பும் ரயில், பொள்ளாச்சிக்கு காலை, 10:20 மணிக்கு வந்து, 10:23 மணிக்கு புறப்படுகிறது. போத்தனுாருக்கு, 11:40 மணிக்கு செல்லும் ரயில், கோவைக்கு, மதியம், 12:10 மணிக்கு செல்கிறது.

மதுரையில் இருந்து பொள்ளாச்சி வரை வேகமாக இயக்கப்படும் ரயில், அதன்பின் ஆமை வேகத்தில் இயக்கப்பட்டு, மதியம், 12:10 மணிக்கு கோவையை சென்றடைகிறது. கோவையில் இருந்து, 11:50 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் கிளம்புகிறது.

இதனால், மதுரை, திண்டுக்கல், பழநி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பயணியர், மேட்டுப்பாளையம் மெமு ரயிலில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பஸ்சில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், சாய்பாபா காலனி மேம்பாலம் பணிகள் நடப்பதால், சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அதனால், மேட்டுப்பாளையம் மெமு ரயிலை பிடிக்கும் வகையில், கோவைக்கு செல்லும் மதுரை ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

இந்த ரயில், காலை, 10:23 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி, 11:25 மணிக்குள் கோவைக்கு செல்லும் வகையில் இயக்க வேண்டும். இதன் வாயிலாக, மேட்டுப்பாளையம் மெமு ரயிலில் பயணிக்க முடியும். ரயில் வேகத்தை அதிகரித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

அதே நேரத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம், 2:10 மணிக்கு கோவைக்கு ரயில் வருகிறது. அதில் பயணிக்கும் பயணியர், மதுரைக்கு செல்வோர் மதுரை ரயிலில் பயணிக்கும் வகையில் மதியம், 2:30 மணிக்கு ரயில் புறப்படுகிறது.

எனவே, ரயில்வே அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, மதுரை – கோவை ரயிலை, பொள்ளாச்சி – கோவை இடையே வேகமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதையும் கொஞ்சம் கவனியுங்க!

பொள்ளாச்சியில் இருந்து, கோவைக்கு காலை, 8:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், 9:25 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் காலை, 8:50 மணி அல்லது, 9:00 மணிக்குள் சென்றால், வேலைக்கு செல்வோருக்கு பயனாக இருக்கும்.எனவே, அதிகாரிகள், 46 கி.மீ., துாரம் உள்ள கோவைக்கு இயக்கப்படும் காலை நேர ரயில் வேகத்தை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் வேலைக்கு செல்வோர், கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்த முடியும். இதில், அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.