கோவை; கோவையில் தங்க வர்த்தகரின் நிறுவனம், கடை மற்றும் வீட்டில் மத்திய ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கோயமுத்தூர் கோல்டு புல்லியன் அசோசியேசன் (சி.பி.ஏ.,) செயலாளர் கார்த்தி. இவர் கோஸ்வான் என்ற, தங்க சுத்திகரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தங்கம் மற்றும் வெள்ளி விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
வைசியாள் வீதியில் உள்ள, இவரது சுரபி புல்லியன் நிறுவனம், ராஜவீதியில் இவருக்குச் சொந்தமான கடை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள இவரது வீட்டில் , மத்திய ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப் பிரிவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 10:00 மணி முதல் நடந்த இந்த சோதனை, மாலை 6:00 மணிக்கு மேலும் நீடித்தது.
இவரின் சகோதரர் வாசுதேவன் என்பவரிடமும், ஆவணங்களின் அடிப்படையில் ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் துவங்கப்பட்ட, தென்னிந்திய தங்கக் கட்டி வியாபாரிகள் சங்க தலைவராகவும் கார்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தங்கக்கட்டி வர்த்தகத்தில், கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக. கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாக தெரிவித்த அதிகாரிகள், சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்து, தகவல் ஏதும் வெளியிடவில்லை. விசாரணை தொடரும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.