22 மாதங்களுக்குப் பிறகு அத்திக்கடவு நீர் வந்தது; சொக்கம்பாளையம் மக்கள் மகிழ்ச்சி

0
5

அன்னுார் : சொக்கம்பாளையம் குளத்திற்கு 22 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அத்திக்கடவு நீர் வந்தது.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில், 2023 மார்ச் மாதம் சோதனை ஓட்டம் தொடங்கியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டம் முழுமையாக செயல்பட துவங்கியது.

குழாய் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோவை மாவட்டத்தில் சில குளம், குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் வரவில்லை. அன்னுார் பேரூராட்சியில், சொக்கம்பாளையத்தில், 10 ஏக்கர் பரப்பளவு குளம் உள்ளது. இக்குளத்திற்கு இதுவரை அத்திக்கடவு நீர் வரவில்லை.

இதையடுத்து இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சாந்தமூர்த்தி உள்பட பல்வேறு தரப்பினர், குன்னத்துாராம்பாளையத்தில் உள்ள அத்திக்கடவு நீரேற்று நிலையம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு அத்திக்கடவு திட்ட ஒப்பந்த ஊழியர்கள் குளத்தின் வடக்கு பகுதியில் உள்ள குழாய் அடைப்பை சரி செய்தனர்.

நேரடியாக குளத்திற்குள் அத்திக்கடவு நீர் வரும்படி பணிகளை செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் சொக்கம்பாளையம் குளத்திற்கு அத்திக்கடவு நீர் நான்கு மணி நேரம் வந்தது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘அன்னுார் பேரூராட்சியில் அன்னுார் குளம், குன்னத்துாராம் பாளையம் குளம் மற்றும் ஆலாம்பாளையம் குளத்திற்கு அத்திக்கடவு நீர் வந்துவிட்டது. இங்கு மட்டும் வராமல் இருந்தது.

இந்நிலையில் இங்கும் அத்திக்கடவு நீர் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் இக்குளத்திற்கு அத்திக்கடவு நீர் வேகமாகவும் அதிக அளவிலும் விடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.