வரி செலுத்தா விட்டால் குடிநீர் ‘ கட்’; வால்பாறை நகராட்சி எச்சரிக்கை

0
5

வால்பாறை : வால்பாறை நகராட்சிக்கு, வரி செலுத்தா விட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

வால்பாறை நகராட்சியில், நடப்பு நிதியாண்டுக்கான அனைத்து வரியினையும் வசூல் செய்ய நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான, 352 கடைகள் உள்ளன. 1,800 குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீர் கட்டணம், சொத்துவரி, தொழில்வரி, கடை வாடகை நிலுவையின்றி செலுத்த வேண்டும் என்று, நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனையடுத்து, நகராட்சியில் கடந்த ஒரு மாதமாக மக்கள் வரி செலுத்தி வருகின்றனர். சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை செலுத்தாதவர்களை கண்டறிந்து, கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்து வருகின்றனர்.

அதிகாரிகள் கூறுகையில், ‘நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீர், சொத்துவரி செலுத்த வேண்டும். தொழிலாளர்கள் தொழில்வரியும், கடைகள் ஏலம் எடுத்தவர்கள் கடை வாடகை செலுத்த வேண்டும்’.

மார்ச் மாதம் கடைசி தேதி வரை காத்திருக்காமல், முன் கூட்டியே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும்’ என்றனர்.