வன விலங்குகளால் சேதமாகும் பயிர்களை முறையாக கணக்கீடு செய்ய வலியுறுத்தல்

0
6

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா முன்னிலை வகித்தார்.

இதில் விவசாயிகள் கலெக்டரிடம் முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு:

* தமிழகத்தில் மலையோர பகுதிகளில், வேட்டை தடுப்பு காவலர் பணிக்கு வெளிமுகமை (அவுட்சோர்சிங்) மூலம் ஆட்கள் தேர்வு செய்வதற்கு பதிலாக, பழங்குடியினத்தவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

* ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க மறுக்கிறது. இதனால் தரமான பால், நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைப்பதில்லை. ஆவின் பால் கொள்முதலில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.

* மதுக்கரை தாலுகாவில் தடை செய்யப்பட்ட, கல் குவாரியை மீண்டும் இயக்க அனுமதிக்க கூடாது.

* மாவட்டம் முழுக்க யானை, பன்றி, மயில், காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகளால் ஏற்படும் விவசாய பயிர் இழப்புகளை ஆய்வு செய்து, கணக்கெடுத்து அதற்கேற்ப பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பயிர் சேதத்துக்கான இழப்பீடு வழங்க வேண்டும்.

* அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்கம் சார்பில் அளித்த மனுவில், சின்னவேடம்பட்டி ஏரி நிலத்தடி நீர்மட்டம் மேம்பட உதவுகிறது. இந்த ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை கொண்டு வரும் திட்டத்தை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

* பூரண்டாம்பாளையம் விவசாயி கந்தசாமி: சூலுார் வட்டம் பூரண்டாம் பாளையம் பகுதிகளில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து, வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசுபடுவதால், விவசாயம் மற்றும் குடிநீர் பாதிப்பு ஏற்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

* தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தண்டபாணி: வருவாய்த்துறை இணையதளத்திலிருந்து பட்டா மற்றும் வரைபடம் பதிவிறக்கம் செய்ய, எட்டு முறை ஓ.டி.பி., வரும் திட்டத்தை மாற்றம் செய்ய வேண்டும்.