கோவை : கோவையில் செயல்படுத்தப்படும், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளை, வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தை கண்ட அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
கோவை பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறுவாணி, பில்லுார் அணைகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, குளோரின் கலக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
24 மணி நேர குடிநீர் திட்டத்தில், 1.50 லட்சம் இணைப்புகள் வழங்க வேண்டும்; இதுவரை, 52 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டு, 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இத்திட்டத்தை மற்ற மாநகராட்சிகளிலும் செயல்படுத்தும் வகையில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து, ‘குழாயில் இருந்து குடியுங்கள்’ என்கிற தலைப்பில், தென்மண்டல அளவிலான கருத்தரங்கை, கோவையில் நேற்று நடத்தின.
பிற மாநில அதிகாரிகள்
தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத், அஸாம், பீகார், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், டில்லி உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 100 உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து, அதிகாரிகள் பங்கேற்றனர்.
கருத்தரங்கை மேயர் ரங்கநாயகி துவக்கி வைத்தார். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை (அம்ரூட் 2.0) இயக்குனர் ஈஷா கலியா, திட்ட விளக்க உரையாற்றினார். கோவையில், 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்தும் விதம் குறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் விளக்கினார்.
குடிநீர் வினியோகம் ஆய்வு
அதன்பின், ஏ.கே.எஸ்., நகரில் உள்ள தொட்டி, மேட்டுப்பாளையம் ரோடு காமராஜர் பகுதியில் செயல்படும் வசூல் மையம், 24 மணி நேர குடிநீர் திட்ட கட்டுப்பாட்டு அறை, சேரன் நகரில் நவீன தொழில்நுட்பத்தில், 400 வீடுகளுக்கு சிக்கனமாக குடிநீர்
வினியோகிப்பதை இணையம் வழியாக, குழுவினர் பார்வையிட்டு ஆச்சரியம் அடைந்தனர்.
கருத்தரங்கில், உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கித்குமார், துணை கமிஷனர் குமரேசன், குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செல்லமுத்து, மண்டல தலைவர்கள் லக்குமி இளஞ்செல்வி, மீனா, கதிர்வேல், தெய்வயானை, தனலட்சுமி, பணிகள் குழு தலைவர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
24 மணி நேர குடிநீர்; சில சிறப்புகள்
n மோட்டார் பயன்படுத்தாமல், வீட்டின் மாடியில் உள்ள தொட்டிக்கு நீரேற்றும் செய்யும் வகையில், 20 அடி முதல், 70 அடி வரை நீரின் அழுத்தம் இருக்கிறது. இதன் மூலம் மோட்டார் இயக்குவதற்கான மின் செலவு மிச்சமாகிறது. இத்திட்ட பயனை அடைய குடிப்பதற்கும், சமையலுக்கும் குழாயில் இருந்து, நேரடியாக பிடித்து பயன்படுத்துவது அவசியம்.n மாநகராட்சி வழங்கும் இணைப்பில் இருந்து, கிளை குழாயை வீட்டு சமையலறை வரை கொண்டு சென்று குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தலாம். சுத்திகரிப்பு கருவிகள் பயன்படுத்த, கொதிக்க வைக்கத் தேவையில்லை. பாட்டில் தண்ணீர் வாங்க வேண்டியதில்லை.n மாடியில் உள்ள தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை குளிப்பது, துவைப்பது போன்ற இதர உபயோகங்களுக்கு பயன்படுத்தலாம். ஏற்கனவே உள்ள தரைமட்ட தொட்டியை, மழை நீர் சேமிப்புக்கு பயன்படுத்தலாம்.n இந்தியாவில், 50 ஆயிரம் குடிநீர் இணைப்புக்கு மேல், 24 மணி நேரம் குடிநீர் வினியோகிக்கும் முதல் மாநகராட்சி என்கிற சிறப்பை, கோவை மாநகராட்சி பெற்றுள்ளது.