அன்னூர் பேருந்து நிலையத்திற்குள் ஆட்டோ நிறுத்துவதற்கு தடை

0
5

அன்னூர், பிப்.1: கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சியில் ஓதிமலை சாலை, சத்தி சாலை, கோவை சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் 95 பயணிகள் ஆட்டோ இயங்கி வருகின்றன. இதில், ஒரு தொழிற்சங்கத்தை சேர்ந்த சில ஆட்டோக்கள் மட்டும் அன்னூர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் நுழையும் இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி வந்தன. மற்ற தொழிற்சங்கத்தினர் இதை கண்டித்து சில தினங்களுக்கு முன் முற்றுகை போராட்டம் மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறி சமாதானப்படுத்தினர். நேற்று முன்தினம் அன்னூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் யமுனா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் பேருந்து நிலையத்திற்குள் எந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ நிறுத்தக்கூடாது.

நிறுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தங்கள் பகுதியிலுள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஆட்டோக்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர். இதை அனைத்து தொழிற்சங்கங்களும் ஏற்றுக்கொண்டன. அமைதி பேச்சு வார்த்தையில் துணை தாசில்தார்கள் பெனசீர், ரேவதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.