கோவை; கோவை தொண்டாமுத்துார் குளத்துப்பாளையம் பகுதியில், வேளாண் விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில், குளிர்பதன கிடங்கு, 92.4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
விவசாய விளை பொருட்கள் குறிப்பாக, காய்கறி, பழங்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் போது உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
சேமிப்பு கிடங்கு கேட்டு, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தொண்டாமுத்துார் பகுதியில், சென்னை, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் பொறுப்பில் குளிர்பதன கிடங்கு கட்டுவதற்கான, அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன. 25 மெட்ரிக் டன் வீதம், நான்கு பிரிவுகளாக இக்குளிர்பதன கிடங்கில் அமைக்கப்படுகிறது.
கோவை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண் குழுவின் முதுநிலை செயலாளர் ஆறுமுகராஜன் கூறுகையில், ” குளிர்பதன கிடங்கு, 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டது. 36அடிக்கு 36 என்ற அளவில் கிடங்கு இருக்கும். தொண்டாமுத்துார் பகுதியில், காய்கறி, பழங்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
இதனை பாதுகாக்க, விவசாயிகளுக்கு குளிர்பதன கிடங்கு பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது, அடித்தளம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிப்., மாத இறுதியில் பணிகள் முடிக்கப்படும்.
விவசாயிகள் தங்களது வேளாண் பொருட்களை குளிர்பதன கிடங்கை பயன்படுத்துவது தொடர்பாக ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகத்தை அணுகலாம், ” என்றார்.