முதியவருக்கு அதிர்ச்சியூட்டிய மாநகராட்சி நிர்வாகம் ஓட்டு வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சொத்து வரி!

0
18

கோவை; கோவையில், ‘ட்ரோன்’ சர்வே மூலம் கட்டடங்கள் மறுஅளவீடு செய்யப்படுகின்றன. அதில், ஓட்டு வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சொத்து வரி விதித்து, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியதால், வீட்டின் உரிமையாளரான, 76 வயது முதியவர் அதிர்ச்சி அடைந்தார்.

கோவை கிராஸ்கட் ரோடு எட்டாவது வீதியில் வசிக்கும், 76 வயது பழனிசாமி, அடுக்குமாடி குடியிருப்புக்கு வாட்ச்மேனாக செல்கிறார். இவருக்கு சொந்தமாக, 1,100 சதுரடி பரப்புக்கு ஓட்டு வீடு இருக்கிறது.

இது நாள் வரை, 2,182 ரூபாய் சொத்து வரி செலுத்தி வந்திருக்கிறார். வீட்டின் முன்புற பகுதியை மெஸ் நடத்துவதற்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். வீட்டின் கடைசி பகுதியில் உள்ள அறையை, சமையல் செய்ய ஒதுக்கிக் கொடுத்துள்ளார். ‘ட்ரோன்’ அளவீடு செய்தவர்கள், கட்டடம் அமைந்துள்ள மொத்தப் பரப்பையும் வணிக பகுதியாக கணக்கிட்டு, சொத்து வரியை மாற்றியுள்ளனர்.

இதையறியாத பழனிசாமி, மாநகராட்சி அலுவலகத்துக்கு சொத்து வரி செலுத்தச் சென்றார். அங்கிருந்தவர்கள், ‘உங்களது கட்டடத்தின் சொத்து வரி மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆறு மாதத்துக்கு ஒருமுறை, 51 ஆயிரத்து, 322 ரூபாய் சொத்து வரி, 360 ரூபாய் குப்பை வரி செலுத்த வேண்டும்.

அரையாண்டு துவங்கிய, 30 நாட்களுக்குள் செலுத்தாததால், அபராத கட்டணம் ரூ.1,050 சேர்த்து, ஒரு தவணைக்கு மொத்தம், 52 ஆயிரத்து, 732 ரூபாய் செலுத்த வேண்டும். ஓராண்டுக்கு ஒரு லட்சத்து, 5,464 ரூபாய் செலுத்த வேண்டும்’ என கூறியுள்ளனர்.

கடந்த நிதியாண்டில், ஒரு தவணை நிலுவை வரி பட்டியலிட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முதியவர் பழனிசாமி, மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் முறையிட்டார். வருவாய் பிரிவு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பழனிசாமி கூறுகையில், ”மொத்தம், 1,100 சதுரடியே கட்டடம் இருக்கிறது. மாநகராட்சி நோட்டீஸில், 5,177 சதுரடி என குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டின் முன்புறத்தில் மெஸ் நடத்த வாடகைக்கு விட்டுள்ளேன்.

அதில் கிடைக்கும் வருவாய், குடும்பத்துக்கு போதியதாக இல்லாததால், மாதச்சம்பளம் ரூ.9,000க்கு வாட்ச்மேன் வேலைக்குச் செல்கிறேன்,” என்றார்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ”ட்ரோன் சர்வே எடுத்தாலும் வரி வசூலர்கள் நேரில் சென்று உறுதிப்படுத்துவர். ஓட்டு வீட்டுக்கு அதிகமான தொகை வர வாய்ப்பில்லை. வீட்டின் உரிமையாளர் முறையிட்டால், அலுவலர்கள் மீண்டும் சென்று ஆய்வு செய்வர்,” என்றார்.