கோவை; கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மயங்கி கீழே விழுந்த இளம்பெண், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கோவை மாநகராட்சியில் மேற்கு மண்டல அலுவலகத்தில், தேர்ச்சி திறன் பணியாளராக இருந்தவர் ராமமூர்த்தி; சிந்தாமணி டிவிஷன் பகுதியில் குடிநீர் சப்ளை செய்யும் பணி செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர், குடும்பத்தினருடன், வடமதுரை அப்பநாயக்கன்பாளையம் ஈஸ்வர சக்தி நகரில் வசித்து வந்தார்.
மாநகராட்சியில் இருந்து வழங்க வேண்டிய தொகைகளை பெறுவதற்கு, தேவையான சான்றிதழ்கள் வழங்க, அவரது மகள் பானுப்பிரியா, 36, தாய் ராஜேஸ்வரி, 64 மற்றும் உறவினருடன், டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு, 21ம் தேதி வந்தார்.
முதல் தளத்தில் உள்ள பொதுப்பிரிவுக்கு, மாடிப்படி ஏறிச் சென்றார்.
அறைக்கு அருகே மயங்கி கீழே விழுந்தார்.
அதில், பானுப்பிரியாவின் பின்தலையில் காயம் ஏற்பட்டது. மாநகராட்சி அலுவலர்கள் ஓடி வந்து, அவரை காப்பாற்ற முற்பட்டனர்.
உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இத்தகவல் அறிந்து, மாநகராட்சி ஊழியர்கள் வருத்தத்தில் உள்ளனர். உக்கடம் போலீசார் விசாரிக்கின்றனர்.