பைக்குகளின் வேகத்துக்கு ஏற்ப ரோடுகள் இல்லை! இதை உணர்ந்தால் விபத்துகள் ஏற்படாது

0
6

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி, திருவள்ளுவர் திடலில் நேற்று நடந்தது.

பேரணியை, கோவை நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலகு கோட்ட பொறியாளர் மனுநீதி துவக்கி வைத்து பேசுகையில், ”கடந்தாண்டில், அதிக விபத்துகள் ஏற்பட்டதில், சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் இருந்தது. இதையடுத்து, போலீசார் சோதனை முயற்சிகள், பலவித கட்டுப்பாடுகள் விதித்து, விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சீட் பெல்ட், ெஹல்மெட் அணிதல் போன்ற விதிமுறைகளை கடைபிடிப்பதால், விபத்துகளை தவிர்க்க முடியும்,” என்றார்.

போக்குவரத்து வார்டன் கமலக்கண்ணன், பொள்ளாச்சி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல், நெடுஞ்சாலை உட்கோட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பள்ளி, மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, திடலில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. மாணவர்கள், சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்று, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணிக்கு முன்னதாக, மாணவர்கள், அதிகாரிகள், சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தனர்.

விதிகளை மதியுங்க!

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி முதல் நிகழ்வாக விழிப்புணர்வு பேரணி நடந்தது.

என்.ஜி.எம்., கல்லுாரியில் பேரணியை, சப் – கலெக்டர் கேத்ரின் சரண்யா துவக்கி வைத்து பேசுகையில்,”கல்லுாரி மாணவர்கள், அதிக திறன் கொண்ட பைக்குகளை வாங்கி அதிவேகமாக செல்கின்றனர். ஆனால், அதற்கேற்ப ரோடுகள் இல்லை என்பதை உணர வேண்டும். வேகமாக செல்வதால், நீங்கள் மட்டுமின்றி எதிரே வரும் வாகன ஓட்டுநர்களும் விபத்துக்குள்ளாகின்றனர்.

விபத்து ஏற்படும் இடத்தை கண்டறிந்து, அங்கு தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், இளைஞர்களும் விழிப்புணர்வுடன் இருக்க

வேண்டும். வாகனங்களை கவனமாகவும், சாலை விதிகளை கடைப்பிடித்தும் ஓட்ட வேண்டும். விதிகளை மதித்து, விபத்துகளை குறைப்போம்,” என்றார்.

விழிப்புணர்வு பேரணி

வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் மற்றும் டிராபிக் வார்டன், கல்லுாரி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.

கல்லுாரியில் துவங்கிய பேரணியில், கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, பாலக்காடு ரோடு, பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை என முக்கிய வீதிகள் வழியாக சென்று, மகாலிங்கபுரம் ரவுண்டானா ஆர்ச் முன் பேரணி நிறைவடைந்தது.