பொங்கல் பஸ்களால் அரசு போக்கு வரத்துக்கழகம் 11.34 கோடி ரூபாய் வருவாய் அள்ளியது

0
6

கோவை; பொங்கல் சிறப்பு பஸ்கள் வாயிலாக, கோவை மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.11.34 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரிகளுக்கு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேல் விடுமுறை கிடைத்ததால், பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். பயணிகளின் வசதிக்காக 1,520 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் வாயிலாக அரசு போக்குவரத்துக்கழகம், ரூ.11.34 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

அரசு போக்குவரத்துக்கழக அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘பொங்கலுக்கு முன், கோவையில் இருந்து, 680 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றின் வாயிலாக, 1.74 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

பொங்கலுக்குப் பின், 494 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் வாயிலாக 1.47 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து திரும்பினர். மொத்தம், 1174 சிறப்பு பஸ்களால் 3.21 லட்சம் பயணிகள் பயனடைந்துள்ளனர்.

இவற்றின் வாயிலாக, பொங்கலுக்கு முன் ரூ.5 கோடி, பொங்கலுக்குப் பின் ரூ.6.34 கோடி என, மொத்தம், ரூ.11.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுதவிர, வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் வாயிலாக, ஏழு லட்சம் பேர் பயணித்துள்ளனர்’ என்றார்.