வீடுகளை இழந்தவர்கள் கார் ெஷட்களில் தஞ்சம்; எம். எல். ஏ., வானதி குற்றச்சாட்டு

0
6

கோவை; ”வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கும் சங்கனுார் கரையோர மக்களை; மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், மேயர், கவுன்சிலர் உள்ளிட்ட ஒருவர் கூடநேரில் சந்தித்து ஆறுதல் கூறாதது வேதனையின் உச்சம்,” என்று, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை ரத்தினபுரி ஹட்கோ காலனியை ஒட்டி, அமைந்துள்ள சங்கனூர் ஓடையில், மாநகராட்சி தூர்வாரும் பணி மேற்கொண்டபோது, இரு வீடுகள் சரிந்து விழுந்தன.

பாதிக்கப்பட்ட மக்களை, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ஓடையின் கரையை அகலப்படுத்தும் போது, வீடுகள் பாதிப்புக்குள்ளாகும் என்று மாநகராட்சிக்கு தெரியும். மாற்று இடத்தையோ வீடுகளையோ வழங்கிவிட்டு, பணிகளை துவங்கியிருக்கலாம்.

மூன்று குடும்பத்துக்கும் வீடு ஒதுக்கீடு செய்ததாக, அரசு சொல்கிறது ஆனால் அக்குடும்பத்தினர் மறுக்கின்றனர். அப்பகுதியில் உள்ள, 19 வீடுகளுக்கும் கயிறு கட்டி மக்களை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளனர். அவர்களுக்கு மாற்று வசதிகள் ஏதும் செய்யவில்லை. அண்டை வீடுகளிலும், கார் ஷெட்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். 19 குடும்பங்களுக்கும் கட்டி முடித்த வீடுகளை ஒதுக்க வேண்டும். மேலும், 137 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் மாற்று இடம் ஒதுக்க வேண்டும்.

வீடுகளை இழந்து நிற்கும் மக்களுக்கு, மாற்று ஏற்பாடு செய்யவில்லை. மாநகராட்சி மேயரோ, கவுன்சிலரோ நேரில் வந்து ஆறுதல் சொல்லவில்லை.

இவ்வாறு, வானதிசீனிவாசன் கூறினார்.