படுமோசமாக ஒரு ரோடு.. . இது நிர்வாக சீர்கேடு! அரசை திட்டித்தீர்க்காமல் எவரும் பயணிப்பதில்லை

0
6

கோவை; கோவை – பாலக்காடு ரோட்டில், குனியமுத்துார் பகுதியில், 3 கி.மீ., துாரத்துக்கு ரோடு குண்டும் குழியுமாக படுமோசமாக இருக்கிறது. போக்குவரத்து போலீசார், குடிநீர் வடிகால் வாரியம், மாநில நெடுஞ்சாலைத்துறை ஆகிய மூன்று துறை அதிகாரிகளும் கூட்டாய்வு செய்து, சீரமைப்பு பணியை விரைந்து மேற்கொள்ள, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

குறிச்சி – குனியமுத்துார் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் குடிநீர் வடிகால் வாரியத்தால் துவக்கப்பட்டது; இன்னும் முடியாமல் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. பாலக்காடு ரோட்டில் 9 கி.மீ., துாரத்துக்கு பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது; இன்னும், 45 மீட்டர் நீளத்துக்கு பதிக்க வேண்டியிருக்கிறது.

குழாய் பதிக்க ரோட்டை தோண்டியதால் குண்டும் குழியுமாக இருக்கிறது; அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.

கேரளாவுக்கு செல்வதற்கான வழித்தடம் மற்றும் கோவைப்புதுார், மதுக்கரை, மதுக்கரை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரோடு என்பதால், எந்நேரமும் இந்த சாலை பிசிதான். ரோடு படுமோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் குழிகளில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

ரோடுகளை சீரமைக்க, தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கி வருகிறது. ஆனால், திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால், ரோட்டை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

இது, பொதுமக்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயரை உருவாக்கி வருகிறது. ரோட்டின் தற்போதைய நிலை குறித்து, கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

குனியமுத்துாரில் 3 கி.மீ., ரோடு சேதமடைந்துள்ள பகுதியை, போக்குவரத்து போலீசார், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூட்டாய்வு செய்து, சாலையை விரைந்து சீரைமக்க வேண்டுமென, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

பாதாள சாக்கடை குழாய் பதிக்க வேண்டியுள்ளது

ரோட்டின் அவலநிலை குறித்து, குடிநீர் வடிகால் வாரியத்தினரிடம் கேட்டபோது, ‘மொத்தம், 9 கி.மீ., துாரத்துக்கு பாதாள சாக்கடை குழாய் பதிக்க வேண்டும்; பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. இன்னும், 45 மீட்டர் துாரத்துக்கே பதிக்க வேண்டியிருக்கிறது. பணி முடிந்த இடத்தில் ரோடு போட, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. அத்துறையினர் விரைவில் மேற்கொள்ள இருக்கின்றனர்’ என்றனர்.