கோவை; கோவையில், ரூ.167.25 கோடியில், 45 ஏக்கரில் அமைக்கப்படும் செம்மொழி பூங்கா பணியை, மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த் ஆய்வு செய்து, மரக்கன்று நடும் பணியை வேகப்படுத்த அறிவுறுத்தினார்.
கோவை காந்திபுரம் பகுதியில், 45 ஏக்கரில் ரூ.167.25 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படுகிறது.
ரூ.300 கோடியில், 6 ஏக்கரில் எட்டு தளங்களுடன், நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்படுகிறது. 2026 ஜனவரியில் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்விரு பணிகளின் முன்னேற்றத்தை, மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த், நேற்று ஆய்வு செய்தார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பூங்கா பணிகள் தொடர்பாக விளக்கினார்.
ஜெர்மன் டெக்னாலஜியில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவது; உக்கடத்தில் இருந்து சுத்திகரித்த கழிவு நீரை தருவிப்பது தொடர்பாக கூறப்பட்டது.
மொத்தம், 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்; நமது மாநில பாரம்பரியத்தை சேர்ந்த, 512 செடிகள் நடப்படுகின்றன.
ராஜமுந்திரியில் இருந்து, 60 ஆயிரம் மரக்கன்றுகள் தருவிக்கப்பட்டு இருப்பதாகவும், கான்கிரீட் கட்டடங்கள் கட்டுமான பணி முடிந்த இடங்களில், மரக்கன்றுகள் நட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ‘இன்னும் நான்கு மாதங்களே இருக்கிறது; பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கும்போது, அழகான தோட்டம் அமைந்திருக்க வேண்டும். எனவே, மரக்கன்றுகள் நடும் பணியை இன்னும் வேகப்படுத்துங்கள்’ என, கண்காணிப்பு அதிகாரி ஆனந்த் அறிவுறுத்தினார்.
கட்டுமான பணிகள், இரு மாதத்துக்குள் முடிந்து விடும் என்பதால், அதன்பின், மரக்கன்று நடும் பணி முழுவீச்சில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்பின், நுாலகம் கட்டுமான பணியை பார்வையிட்டார். ஓராண்டுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்பதால், வேகப்படுத்த அறிவுறுத்தினார்.
அதன்பின், ஆம்னி பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்தும் பணி, காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட்டை நவீன முறையில் புதுப்பிப்பது தொடர்பாகவும், ஆய்வு செய்து, அறிவுரை வழங்கினார்.