கோவை: கோவையில், ஒரு சவரன் தங்கம் விலை நேற்றைய தினம், 62 ஆயிரம் ரூபாயானது; இதுதவிர, செய் கூலி, சேதாரம் சேர்க்கப்பட்டதால், விலை மேலும் அதிகரித்தது. பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் காணப்படுகிறது. 2024 ஜூலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. அதன் காரணமாக, அச்சமயத்தில் விலை சற்று குறைந்து காணப்பட்டது; நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
2024 அக்., 31ல் ஒரு கிராம் தங்கம் விலை, 7,455 ரூபாய்; ஜி.எஸ்.டி., சேர்த்து, ஒரு சவரன், 61,429 ரூபாய்க்கு விற்பனையானது. அத்தருணத்தில் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து, 56 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சவரன் விற்பனையானது.
மீண்டும் உயர்வு
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சூழல் காரணமாக, தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக உயரத் துவங்கியது. 2025, ஜன., 1ல் 58,916 ரூபாயாக உயர்ந்தது.
நேற்று, ஒரு கிராம் தங்கம் விலை, 7,525 ரூபாயாக இருந்தது; ஒரு சவரன் 60,200 ரூபாய்; 3 சதவீதம் ஜி.எஸ்.டி., சேர்த்தால், 62 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. நகைகளின் வடிவமைப்புக்கு ஏற்ப செய்கூலி, சேதாரம் சேர்க்கப்பட்டதால், பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கத்தின் தரத்தை பரிசோதனை செய்யும் அமைப்பான, எம்.எம்.டி.சி. -பேம்ப் அமைப்பின்-, கோவை பிரிவு பிசினஸ் அசோசியேட் கயிலைராஜன் கூறியதாவது:
2024 ஜன., 1ல் ஒரு சவரன் தங்கம் ஜி.எஸ்.டி., சேர்த்து 48,698 ரூபாய்க்கு விற்பனையானது. 2025 ஜன., 1ல், 58,916 ரூபாயாக அதிகரித்து இருந்தது. நேற்று ஜி.எஸ்.டி., சேர்த்து, 62 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது; செய்கூலி, சேதாரம் தனி. 2025 இறுதிக்குள் தங்கம் விலை மேலும், 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
டிரம்ப் வருகையும் காரணம்
அமெரிக்க டாலர் மதிப்பில் தங்கத்தின் விலை மதிப்பிடப்படுகிறது. சில நாட்களாக அமெரிக்கா நுகர்வு திறன், உற்பத்தி திறன், பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவை எதிர்பார்த்த சாதகமான பொருளாதார சூழல் இல்லை.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொள்கை சார்ந்த செயல்பாடுகள் காரணமாக பொருளாதாரம் உடனடியாக அடிவாங்கும், டாலர் மதிப்பு குறையும் என்ற எண்ணத்தால் தங்கத்தில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகமாகியுள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து விலை அதிகமாகியுள்ளது. இந்தாண்டும் விலையேற்றம் தொடரும்.
நகையாக அல்லாமல் நாணயமாக தங்கத்தை முதலீடு செய்ய நினைப்பவர்கள் சேமிக்கலாம். டிஜிட்டல் தங்கம் சார்ந்த முதலீடுகளில் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளதால், சிறந்த முதலீடுக்கு தங்க நாணயம் தேர்வாக இருக்கும். தங்க நாணயங்களுக்கும், 2 முதல் 3 சதவீதம் செய்கூலி, சேதாரம் கணக்கிடப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நகையாக அல்லாமல் நாணயமாக தங்கத்தை முதலீடு செய்ய நினைப்பவர்கள் சேமிக்கலாம். டிஜிட்டல் தங்கம் சார்ந்த முதலீடுகளில் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளதால், சிறந்த முதலீடுக்கு தங்க நாணயம் தேர்வாக இருக்கும். தங்க நாணயங்களுக்கும், 2 முதல் 3 சதவீதம் செய்கூலி, சேதாரம் கணக்கிடப்படும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொள்கை சார்ந்த செயல்பாடுகள் காரணமாக பொருளாதாரம் உடனடியாக அடிவாங்கும், டாலர் மதிப்பு குறையும் என்ற எண்ணத்தால் தங்கத்தில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகமாகியுள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து விலை அதிகமாகியுள்ளது.