கோவை அரசு மருத்துவமனையில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்ட 3 கார்களுக்கு பூட்டு

0
6

கோவை, ஜன. 23: கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என சுமார் 4 ஆயிரம் பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த நோயாளிகள் தங்களது வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. வாகனங்கள் திருட்டு தடுக்கவும், இடநெரிசலை குறைக்கவும் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வரும் பலர் தங்களின் வாகனங்களை மருத்துவமனையின் வெளியே சாலையோரத்தில் நிறுத்தி வருகின்றனர். மேலும், பணிக்கு வரும் டாக்டர்கள், பயிற்சி மருத்துவர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள டாக்டர்கள் கார்கள் நிறுத்தப்படும் பகுதியில் நீண்ட நாட்களாக 3 கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த கார்கள் யாருடையது என தெரியாத நிலையில், இது குறித்து மருத்துவமனையின் டீனிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களை கண்டறிந்து அதற்கு பூட்டு போட உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனை பாதுகாவலர்கள் கேட்பாரற்று நீண்ட நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் இருந்த 3 கார்களுக்கு பூட்டு போட்டனர்.