கோவை குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தும், ‘சைல்டு லைன்’ சேவையில் பணியாளர்கள் அதிகரிப்பு, நிதி, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ், இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ‘சைல்ட் லைன் 1098’ சேவை செயல்பட்டு வந்தது. பிறகு, அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவுடன் இணைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பாலியல் வன்முறை, கடத்தல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகும் குழந்தைகள், 24 மணி நேரமும், 1098 என்ற அழைப்பு எண்ணில் உதவி கோரலாம். கோவை போன்ற முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களிலும், இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது.
குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தால், போலீசார் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவுடன் இணைக்கப்பட்ட பிறகு, மாவட்ட சைல்டு லைன் மற்றும் ரயில்வே சைல்டு லைனில், தலா எட்டு பேர் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் பெரும்பாலும், இதே எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமனம் நடந்து வருகிறது. இருப்பினும், சில மாவட்டங்களில் பணியாளர்கள் நியமனம் தாமதம், நிதி, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதால், பணியில் தொய்வு ஏற்படுவதாக புகார்கள் எழுகின்றன.
சென்னைக்கு அடுத்து வளர்ந்த நகரான கோவையில், ‘போக்சோ’ உள்ளிட்ட வழக்கு பதிவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அதற்கேற்ப, சைல்டு லைன் பிரிவில் பணியாளர்கள் நியமனம், கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கிறோம்!
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சாவிடம் கேட்டபோது,”சைல்டு லைன், 1098 எண்ணிற்கு அழைப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கோவையில் சைல்டு லைனில் பணியாளர்கள் போதியளவில் நியமிக்கப்பட்டுள்ளதால், பணியில் தொய்வு இல்லை. புகாருக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்றார்.