கீழடி: கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள 10 கட்டட தொகுதிகளில், ஆறு தொகுதிகளில் 13,384 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பண்டைய கால கட்டட கலை தொழில்நுட்பத்தை பறைசாற்றும் சுருள்வடிவ குழாய், செங்கல் கட்டுமானம், உறைகிணறு, கெண்டிமூக்கு பானை உள்ளிட்டவை அடங்கும்.
நேற்று கீழடி அருங்காட்சியகத்திற்கு திருச்சி என்.ஐ.டி., கல்லுாரியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள், பேராசிரியை சங்கீதா தலைமையில் வந்தனர். கீழடி அகழாய்வில் கிடைத்த பண்டைய தமிழர்களின் கட்டட கலை நுட்பம், பானைகள், குழாய் வடிவ மண் இணைப்பு குழாய், உறைகிணறு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பார்வையிட்டனர். கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள மண்பாண்ட பொருட்கள், உறைகிணறுகள் உள்ளிட்டவை குறித்த கார்ட்டூன் படத்தை, என்.ஐ.டி., நிர்வாகம், மாணவர்களுக்கு வழங்கியிருந்தது. அதை வைத்து நேரில் பார்வையிட்ட மாணவர்கள், அவற்றை மீண்டும் நேரில் பார்த்து வரைந்தனர்.