கோவை, ஜன. 19: கோவை மாவட்டத்தில் 1405 ேரஷன் கடைகள் செயல்படுகிறது. மாவட்ட அளவில் சுமார் 11.50 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. சுமார் 9 லட்சம் ரேஷன்கார்டுகளுக்கு அரிசி வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் மாதந்தோறும் சுமார் 20 ஆயிரம் டன் அரிசி, ஆயிரம் டன் துவரம்பருப்பு, 800 டன் சர்க்கரை, 600 டன் கோதுமை, 9.50 லட்சம் பாமாயில் பாக்கெட் ஒதுக்கப்படுகிறது. இந்திய உணவு கழக குடோனில் (எப்சிஐ) இருந்து மாவட்ட அளவில் உள்ள 9 தமிழக நுகர்பொருள் வாணிப கழக குடோனிற்கு உணவு தானியங்கள் சப்ளையாகிறது. அங்கேயிருந்து கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஒப்பந்த நிறுவனத்தினர்லாரிகள் மூலமாக உணவு பொருட்கள் வினியோகம் நடக்கிறது.
கடைகளுக்கு வந்த பின்னர் ரேஷன் அரிசி மூட்டையில் ஒரு கிலோ அரிசி குறைந்தால் அதற்கு 45 ரூபாய் அபராதம், துவரம்பருப்பு ஒரு கிலோவிற்கு 110 ரூபாய், சர்க்கரைக்கு 50 ரூபாய், கோதுமைக்கு 45 ரூபாய், பாமாயிலுக்கு 130 ரூபாய், கெரசின் 50 ரூபாய் அபராதம் விதித்து வழங்கல் பிரிவினர், கூட்டுறவு துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அபராத நடவடிக்கை தற்போது தீவிரமாக நடப்பதால், ரேஷன் துறையினர் கலக்கமடைந்துள்ளனர்.