கோவை,
தமிழகத்தில் ஆயுதபூஜை, பொங்கல், தீபாவளி, ஆடிப்பெருக்கு, திருக்கார்த்திகை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பூக்களின் தேவைஅதிகமாக இருக்கும். அந்த காலகட்டத்தில் பூக்களின் விலை அதிகரிக்கும். இன்று (திங்கட்கிழமை) முகூர்த்த நாள் என்பதால் கோவையில் பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது. ஆனால் கோவை பூமார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக கோவையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும் நேற்று பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி சென்றனர்.
இது குறித்து பூமார்க்கெட் மலர் வியாபாரிகள் சங்க தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
கோவை பூமார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், நிலக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூ கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்ய வில்லை. இதனால் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கோவை பூமார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளது.
கடந்த வாரம் ரூ.400-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ நேற்று ரூ.400 விலை உயர்ந்து ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது போல் கடந்த வாரம் ரூ.300-க்கு விற்கப்பட்ட ஜாதி மல்லி ரூ.600-க்கும், ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்ட சாமந்தி ரூ.200-க்கும், ரூ.30 முதல் ரூ.50 வரை விற்கப்பட்ட அரளி ரூ.80-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட சம்மங்கி ரூ.200-க்கும், ரூ.80-க்கு விற்கப்பட்ட பட்டன் ரோஜா ரூ.120-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட மைசூரு ரோஜா 10 பூக்கள் கொண்ட ஒரு கட்டு நேற்று ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
வருகிற 17-ந் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. அப்போது அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடை பெறும். அத்துடன் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை என ஆடி மாதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். எனவே பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.