கோவை, ஜன. 19: கோவை உக்கடத்திலிருந்து அவினாசி ரோடு வழியாக சோமனூருக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. நகரில் அதிக தூரம் இயக்கப்படும் டவுன் பஸ்கள் இந்த மார்க்கத்தில் சென்று வருகிறது. இந்த வழிதடத்தில் அதிக கிராமங்கள் இருக்கிறது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இருந்த போதிலும் இந்த வழித்தடத்தில் போதுமான பஸ்கள் இயக்கப்படுவதில்லை. மேலும், ஒரே நேரத்தில் 3 முதல் 5 பஸ்கள் விடப்படுகிறது. பின்னர், அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் பஸ் கிடைப்பதில்லை. சோமனூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து உக்கடம் வரும் பஸ்களும் அடுத்தடுத்த ஒரிரு நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் உரிய நேர மேலாண்மை கடைபிடிக்கப்படுவதில்லை.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து சோமனூர் செல்ல அதிக பயணிகள் மூட்டைகளுடன் ஏறுவதாக தெரிகிறது. குறிப்பாக, மூட்டை பெட்டிகளுடன் ஏறும் வடமாநில தொழிலாளர்கள் சிலர் பஸ்சில் ஏற்ற மறுக்கின்றனர். அதிக வருவாய் தரும் முக்கிய வழிதடமாக உக்கடம் சோமனூர் இருக்கிறது. இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். குறிப்பாக பீக் அவர்ஸ் நேரங்களில் கூடுதல் பஸ்கள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.