ஆபத்தான இடங்களில் ‘சி.சி.டி.வி., கேமரா ‘ அத்து மீறலுக்கு கடிவாளம் போடலாமே

0
8

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி – வால்பாறை இடையிலான சாலையில், சுற்றுலாப் பயணியரின் அத்துமீறலை தடுக்க, ஆபத்தான இடங்களில் ‘சி.சி.டி.வி., கேமரா’ பொருத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள நீர்தேக்கங்கள், அணைகள், கோவில்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் வனவிலங்குகளைக் காண அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிகின்றனர்.

இதனால், வனம் ஒட்டிய சாலையில், வனத்துறை வாயிலாக ஆங்காங்கே, விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், குரங்குகளுக்கு உணவளிக்காதீர், யானை கடக்கும் பகுதி, வாகனங்களை நிறுத்தக் கூடாது, வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது, என பல்வேறு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேபோல, வேட்டைத்தடுப்பு காவலர்களும், ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், சிலர், மலைப்பாதையில், ஆபத்தான இடங்களில், வாகனங்களை நிறுத்தி மது அருந்தவும், வனவிலங்குகளை ‘போட்டோ’ எடுக்கவும், இயற்கையை ரசிக்கவும் முற்படுகின்றனர்.

வனத்துறையினர் கண்டறிந்தாலும் எச்சரிக்க முற்பட்டாலும், சுற்றுலாப் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். எனவே, இத்தகைய அத்துமீறலை தடுக்க, ஆபத்தான இடங்களில் ‘சி.சி.டி.வி., கேமரா’ பொருத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதமும் விதிக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி அருகே, ஆழியாறு சோதனைச் சாவடியில் இருந்து மலைப்பாதை துவங்குகிறது. இயற்கை எழில் மிகுந்த வனப்பகுதி நடுவே செல்லும் சுற்றுலாப் பயணியர், பள்ளத்தாக்கு, நீர்நிலைகளைக் காண நேரிட்டால், திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி, அங்கு செல்ல முற்படுகின்றனர்.

வனத்துறையினர் தடுக்க முற்பட்டால், அங்கு பிரச்னை ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, ‘சி.சி.டி.வி., கேமரா’ பொருத்தி அத்துமீறலை பதிவு செய்ய வேண்டும். அதன் வாயிலாக, அபராதம் விதிப்பு நடவடிக்கையை தொடர வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.