மேட்டுப்பாளையம்,; சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மோத்தேபாளையத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வனவிலங்குகளிடம் இருந்து விவசாயிகளையும், மக்களையும் காப்பாற்றும் இயக்கம், தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பவானி ஆற்று நீர் பாசன சங்கம் ஆகியவை இணைந்து, இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.
கூட்டத்துக்கு பேராசிரியர் கனகராஜ் தலைமை வகித்தார். வேலுமணி, ரவிக்குமார், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழனிசாமி வரவேற்றார். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேணுகோபால், பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் துரைசாமி, சுரேஷ்குமார், வெண்ணிலா உள்பட பலர் பேசினர். கூட்டத்தில், மோத்தேபாளையம் கிராமத்தில், சிறுத்தையை பிடிக்க சிறுமுகை வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம் நகராட்சியின் கழிவுநீர் பவானி ஆற்றில் கலப்பதால், தண்ணீர் மாசடைகிறது. எனவே கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
சிக்கதாசம்பாளையம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலை திட்டம், பசுமை வீடுகள் உட்பட ஊராட்சியின் சார்பில் கிடைக்கும் வசதிகள் தடைபடும். குடிநீர் கட்டணம், வீடுகளின் வரிகள் உயரும்.
எனவே சிக்கதாசம்பாளையம் ஊராட்சியை, மேட்டுப்பாளையம் நகராட்சியுடன் இணைப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் பேசினர். முடிவில் விஜயகுமார் நன்றி கூறினார்.