பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில், சேகரமாகும் பழம் மற்றும் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சியின் மக்கள் தொகை, 1,26,000 ஆகும். 26,669 குடியிருப்புகள் உள்ளன.நகர் பகுதியில், தினமும், 31 டன் திடக்கழிவுகள் சேகரமாகிறது. இப்பணி, 116 துாய்மை பணியாளர்கள் வாயிலாக, தினமும் வீடுகள் தோறும் மக்கும், மக்காத கழிவுகள், பிளாஸ்டிக், மறுசுழற்சி கழிவுகள், அபாயகரமான கழிவுகள், தரம் பிரித்து பெறப்படுகின்றன.
இவை அறிவியல் முறைப்பபடி உரமாக மாற்றப்படுகின்றன. அதன் ஒரு கட்டமாக, பழம் மற்றும் காய்கறி கழிவுகளை பயன்படுத்தி உயிரி எரிவாயு கூடம் வாயிலாக, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
பொள்ளாச்சிஅழகாபுரி வீதியில், உயிரி எரிவாயு (பயோ காஸ்) தயாரிக்க ஆடுவதை கூடம் அருகே, இடம் ஒதுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்திட்டம் 2013-14ம் ஆண்டில், 90 லட்சம் ரூபாயில், கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து, கடந்த, 2015ம் ஆண்டு கட்டடம் திறக்கப்பட்டது.
அதன்பின், சோதனை ஓட்டம் மட்டுமே நடந்தது. முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. சில ஆண்டுகளுக்கு
முன், இங்குள்ள பழம், காய்கறி கழிவுகளை கொண்டு பயோ காஸ், பயோ கம்பரஸ் நேச்சுரல் காஸ் ஆக மாற்றி, ‘பாட்டிலிங்’ சிலிண்டர் விற்பனையை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. அதன்பின், அத்திட்டமும் கைவிடப்பட்டது.
பெயரளவுக்கு இயக்கப்பட்ட பயோகாஸ் திட்ட இயந்திரங்கள், காட்சிப்பொருளாக மாறின. இந்நிலையில், இதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி கமிஷனர், சுகாதாரத்துறை அதிகாரிகள்ஆலோசனை செய்தனர்.
இயந்திரங்களை சுத்தப்படுத்தி, தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், எலுமிச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட அசிடிட்டி பழங்கள் மட்டும் பயன்படுத்த முடியாது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:
நகராட்சி மார்க்கெட் பகுதியில், காய்கறி, பழக்கடைகளில் தரம் பிரித்து சேகரிக்கப்படும் கழிவுகளை, ஐந்து டன் கொள்ளளவுள்ள இம்மையத்தில் அரைத்து, காற்றில்லா சூழ்நிலையில் அறிவியல் முறைப்படி, மீத்தேன் உற்பத்தி செய்யப்படும் (உயிரி எரிவாயு) திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
காய்கறி, பழக்கழிவுகள், உணவு கழிவுகள் என தினமும், இரண்டு டன் கிடைக்கிறது.இக்கழிவுகளிலிருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுவை, மின் ஆக்கிகள் மூலம் மின்சாரமாக சேமிப்பு செய்யப்பட்டு, அங்குள்ள விளக்குகள், இயந்திரங்களை இயக்க பயன்படுத்தப்படுகின்றன.
தினமும், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக இவற்றை இயக்க, இந்த மின்சாரம் பயன்படுகிறது. ஐந்து டன் வரை கழிவுகளை அரைக்கலாம் என்பதால், கூடுதலாக கழிவுகள் கிடைத்தாலும் பயன்படுத்தலாம்.
எனவே, நகரப்பகுதி மக்கள், காய்கறி, பழங்கள், உணவு கழிவுகளை திறந்த வெளியில் வீசாமல், துாய்மை பணியாளர்களிடம் வழங்கலாம். இல்லையெனில், நேரடியாக இந்த மையத்துக்கே கொண்டு வந்து கொடுக்கலாம்.
இவற்றை மறுசுழற்சி செய்து பயன்படுத்த பயனாக இருக்கும். எனவே, நகரின் துாய்மை காக்க இதுபோன்ற கழிவுகளை மக்கள், தரம் பிரித்து வழங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.