பில்லூர் அணையில் தண்ணீர் திறப்பு, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

0
94
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பச்சை பசேல் என்று காணப்படும் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்து உள்ளது. இந்த அணை 100 அடி உயரம் கொண்டது. நீலகிரி மற்றும் கேரள வனப்பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த அணையில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த அணையின் தண்ணீரை கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. இதனால் பவானி ஆற்றில் ஓரளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 87½ அடி இருந்தது. இந்த நிலையில் இங்கு மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி நேற்று காலை அணையில் இருந்து மின் உற்பத்திக்காக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து 2 மின் உற்பத்தி எந்திரங்கள் இயக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.
ஆற்றில் செந்நிறத்தில் கரைபுரண்டோடிய தண்ணீரை பொதுமக்கள் கூட்டமாக கண்டு ரசித்தனர். சில மணி நேரம் கழித்து மின் உற்பத்திக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் வடிந்தது.