குற்றச் செயல்களை தடுக்க புது கமிஷனர் புது திட்டம் எங்கெங்கும் போலீஸ்!

0
7

கோவை; மாநகர பகுதிகளில் ரவுடிகள், கஞ்சா விற்பனை, சட்ட விரோத மது விற்பனை, போக்குவரத்து பிரச்னை, அடிதடி உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையில், மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், ‘பீட் ஆபிசர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

முதியோர் பாதுகாப்பு, நெய்பர்ஹூட் போலீஸ், மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு உள்ளிட்ட, பழைய திட்டங்களை ஒருங்கிணைத்து, புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக, போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஆயுதப்படையில் இருந்து 312 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ‘பீட் ஆபிசர்’ திட்டத்தில் ஒரு இரு சக்கர வாகனத்திற்கு இரண்டு போலீசார் என 52 பீட் வாகனங்களில், சுழற்சி முறையில் போலீசார், 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவர்.

‘பீட் ஆபிசர்’கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு பீட் ஆபிசர்கள் தினமும் ‘விசிட்’ செய்வர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில், சுமார் 30 நிமிடங்கள் ‘பீட் ஆபிசர்’ இருப்பர்.

பள்ளி, கல்லுாரிகள், நகை கடைகள், பைபான்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பீட் ஆபிசர்ஸ் தொடர்ச்சியாக கண்காணிப்பர். பொது மக்கள் நடமாட்டம், குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்களில், பீட் ஆபிசர்ஸ் இருப்பதால், குற்றங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

இத்திட்டம் குறித்து, போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:

24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில், ‘பீட் ஆபிசர்ஸ் சிஸ்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பீட் போலீசாரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ரோந்து, தணிக்கையில் ஈடுபடுவர். மாநகர் முழுவதும் சுமார், 200 இடங்கள் திருட்டு, கொள்ளை நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டன.

அப்பகுதிகளில் பீட் ஆபிசர்கள், அடிக்கடி ரோந்து சென்று கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் பல்வேறு திட்டங்களையும், பீட் ஆபிசர்கள் கவனிக்கும் வகையில் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், மற்ற போலீசாரின் வேலை பாதிக்கப்படாது. வாரத்தில் ஒரு நாள் பீட் ஆபிசர்கள் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை சந்தித்து பேசுவர். அவர்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால், தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு, செய்து தரவும் திட்டமிட்டுள்ளோம்.

ஒவ்வொரு பீட் ஆபிசரும், தினசரி குறைந்தது 10 முக்கிய இடங்களை ‘கவர்’ செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாநகரில் நடக்கும் குற்றச்சம்பவங்களை, எளிதாக கண்காணிக்க முடியும்; தடுக்கவும் முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.