பெ.நா.பாளையம்: அண்ணா பல்கலை சம்பவம் எதிரொலியாக அனைத்து பள்ளிகளிலும் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில், தமிழக அரசு ஈடுபட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கல்வி வளாகங்களுக்குள் மாணவர்கள் தவிர, வேறு யாரையும் முன் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைய அனுமதிக்க கூடாது என, உயர்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
பல்கலை, கல்லூரியில் வளாக பாதுகாப்பும், மாணவியர்களுக்கான பாதுகாப்பும் மிக முக்கியம். மாணவிகளின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க, உரிய வசதிகள் செய்யப்பட வேண்டும்.
இதில், அலட்சியமாக இருக்கக் கூடாது. பல்கலையில் வெளி நபர்களோ, உள்ளே இருப்பவர்களோ, ஏதேனும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது. பல்கலை மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் ‘ஆன்லைன்’ மற்றும் ‘ஆப்லைன்’ தகவல் தொழில்நுட்ப வசதிகளை பலப்படுத்தி, வளாக நிகழ்வுகளின் பதிவுகளை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் ஆய்வு செய்யக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும்.
கல்லூரிகளில் பாலியல் வன்கொடுமை தடுப்புக் குழு, முழு அளவில் செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். மாணவிகள் ஏதேனும் புகார்கள் தெரிவித்தால், உடனடியாக அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை உயர்கல்வித்துறை பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளியிலும், தனியார் பள்ளிகளிலும், மாணவியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய நடைமுறைகளை தமிழக அரசு வகுத்து, அதை பள்ளிகளில் செயல்படுத்த முன் வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிக்கு வருகை தரும் வெளி நபர்களின் விபரம் உரிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
கல்வி வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவாயில்கள் இருந்தால், முடிந்த வரை அவற்றின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டும். அடையாள அட்டை கட்டாயமாக்க வேண்டும். முக்கியமான நிகழ்வுகளை உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பள்ளி வளாகத்துக்குள் வரும் பார்வையாளர்களின் வாகனங்களின் விபரம் தினசரி பதிவு செய்ய வேண்டும். பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காவலாளிகள் நியமனம் செய்யப்பட வேண்டும். மாணவிகளின் பாதுகாப்புக்கான ‘காவலன் செயலி’யை அனைத்து மாணவ, மாணவியரும் பதிவிறக்கம் செய்து, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும், அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்.
‘போக்சோ’ சட்டம் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான புகார் பெட்டியை அடிக்கடி திறந்து பார்த்து, அதில் உள்ள கடிதங்களை படித்து, குழந்தைகளின் குறைகளை போக்க உரிய நடவடிக்கைகளை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.