மலைவாழ் மக்களின் பொங்கல் திருவிழா

0
9

தொண்டாமுத்தூர்; சீங்கப்பதி மலை கிராமத்தில் மலைவாழ் மக்களின் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வனப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சீங்கப்பதி மலை கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில், வெள்ளப்பதி, பொட்டப்பதி, சீங்கப்பதி, சாடிவயல் ஆகிய, நான்கு மலை கிராமங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து, கயிறு இழுத்தல், கும்மியடித்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில்,சாடிவயல் ஒட்டிய மலை கிராமங்களில், நேற்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தைப்பொங்கல் திருநாளில், நாங்கள் அனைவரும், அந்த அந்த மலை கிராமத்திற்கு என உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி, பொங்கல் வைத்து வழிபடுவோம். மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் தினத்தில், பச்சரிசியிட்டு பொங்கல் வைத்து, ஆடு, மாடுகளுக்கு படையலிட்டு வழிபடுவோம். இறப்பு போன்ற காரணங்களால், பொங்கல் வைக்க முடியாதவர்கள், பச்சரிசியை ஊற வைத்து, அதில், தேங்காய் மற்றும் சர்க்கரையிட்டு, அதை கால்நடைகளுக்கு வைத்து, வழிபடுவோம், என்றனர்.

காணும் பொங்கல் குறித்து அட்டுக்கல் மலைவாழ் மக்கள் கூறுகையில்,முந்தைய காலங்களில், காணும் பொங்கலன்று, கெம்பனூர் மக்கள், அட்டுக்கல் நீர்வீழ்ச்சி பகுதிக்கு மேளதாளத்துடன் வருவார்கள். அவர்களுடன் இணைந்து, நாங்களும் சேர்ந்து, நீர்வீழ்ச்சிக்கு சென்று, வீட்டில் செய்த முறுக்கு போன்ற பண்டங்களை, ஒருவருக்கொருவர் மாற்றி கொள்வோம்.

அதோடு, ஊர் விவகாரங்களையும், பகிர்ந்து கொள்வோம். ஆனால், இப்போது, அட்டுக்கல் நீர்வீழ்ச்சி பகுதிக்கு யாரும் வருவதில்லை. இதனால், கடந்த சில ஆண்டுகளாக, இந்த நடைமுறை பின்பற்றுவதில்லை.

இதனால், தொண்டாமுத்தூர் வாய்க்காலுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் காணும் பொங்கல் கொண்டாடி வருகிறோம்,என்றனர்.