‘பட்டி’ பெருக உற்சாக கொண்டாட்டம்: இன்று பூப்பறித்தல் நோன்பு

0
10

உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்ல, விளைநிலங்களில் ‘பட்டி’ அமைத்து, பொங்கலிட்டு, உடுமலை பகுதி மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இன்று, பூப்பறிக்கும் நோன்புக்கு தயாராகி வருகின்றனர்.

உடுமலை, பொள்ளாச்சி பகுதி கிராமங்களில் உழவுக்கும், பால் உற்பத்தியால் வருவாய்க்கும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு, நன்றி சொல்லும், மாட்டு பொங்கல் உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று காலை நீர்நிலைகளுக்கு கால்நடைகளை அழைத்துச்சென்று, குளிப்பாட்டி, கொம்புகளுக்கு, வர்ணம் பூசி அலங்கரித்தனர்.

விளைநிலங்களில், மூங்கில் தடுப்புகளால், பட்டியும், சிறிய தெப்பக்குளமும் அமைத்து, கரும்பு தோரணத்தால் அலங்கரித்தனர்.

பின்னர், கால்நடை வளம் பெருக, பொங்கலிட்டு, வழிபாடு நடத்தினார்கள். மூலிகை செடிகள் மற்றும் கரும்பு தோரணத்தால் அலங்கரிக்கப்பட்ட, தெப்பக்குளம் மீது கால்நடைகளை நடக்க செய்தனர். பின்னர், ‘பட்டி பெருக, பால் பானை பொங்க, நோவும், பிணியும் தெருவோடு போக, பட்டியாரே,’ என பாடி கால்நடைகளோடு வலம் வந்தனர்.

மாட்டு பொங்கலையொட்டி, உடுமலை, பொள்ளாச்சி பகுதி கிராமங்களில் உற்சாக கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தது.

பூப்பறிக்கு வருகிறோம்!

பூப்பறிக்க வருகிறோம் என குழந்தைகள் குதுாகலமாக ஒன்றிணைந்து விளையாடும் பூப்பறித்தல் நோன்பு இன்று கிராமங்களில், சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையில், குழந்தைகளுக்கும், இளம் பெண்களுக்கும், உரித்தான நாளாக பூப்பொங்கல் உள்ளது. தை பிறக்கும் முன்னர், மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசல்களில் சாணத்தில் பிள்ளையார் வைப்பார்கள். பெண் குழந்தைகளுக்கும் மாதம் முழுவதும் வைத்த சாண பிள்ளையாரை காணும் பொங்கலன்று கூடையில் எடுத்து வந்து, ஆற்றங்கரை அல்லது பொது இடத்தில் ஒன்றாக சேருகின்றனர்

அக்கிராமத்தில் கிடைக்கக்கூடிய விதவிதமாக பூக்களை பறித்து குறிப்பாக ஆவாரம்பூவையும் பறித்து பிள்ளையார் கூடைகளையும் பூக்களையும் வைத்து, இளம் பெண்கள் வட்டமிட்டு கும்மியடிக்கின்றனர்.

பின்னர், ஒன்றாக சேர்ந்து ஆறுகளிலும், நீரோட்டங்களில் விட்டு விட்டு வீடு திரும்புகின்றனர். ஒன்றாக கூடும் குழந்தைகளும் பெண்களும், பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர்.

‘பூப்பறிக்க வருகிறோம் பூப்பறிக்க வருகிறோம்’, ‘பூப்பறிக்க தை மாசம் வருகிறோம்’ என பல்வேறு பாடல்களை பாடி விளையாடி மகிழ்கின்றனர். நீண்ட நாட்களாக காணாத நண்பர்கள், தோழிகளை காணுவதற்கு அனைவரும் ஒன்று கூடும் விழாவாகவும் இப்பொங்கல் குறிப்பிடப்படுகிறது.

இதே போல், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும், காணும் பொங்கலை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பட்டிப்பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பொள்ளாச்சி பகுதியில் கடந்த, 13ம் தேதி போகி பண்டிகையுடன், பொங்கல் விழா கொண்டாட்டம் துவங்கியது.

தொடர்ந்து, தை 1ம் தேதி விநாயகருக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, நேற்று மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ‘பட்டி பொங்கல்’ விழா கொண்டாடப்பட்டது.

ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, குழந்தையை போன்று பாவித்து குளிப்பாட்டி, கொம்புகளில் வண்ணங்கள் பூசி, சலங்கை, காதோலை, கருகமணி என ஆபரணங்கள் அணிவித்து அழகுப்படுத்துவர்.

தோட்டங்களில், ‘பட்டி’ அமைத்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படும். ‘வாங்க பட்டியாரே’ என மாடுகளை அழைத்து பாடல்களை பாடி அழைத்தனர்.

பொள்ளாச்சி ஜமீன் கோட்டாம்பட்டி, கொண்டேகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.