சீசன் நேரத்திலும் குறையாமல் இருக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு!

0
8

பொள்ளாச்சி: வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை, 150 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தற்போது உயர்ந்த விலை, சீசன் நேரத்திலும் தொடர்ந்தால் பயன்பெற முடியும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மற்ற சாகுபடிகளை விட தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் தேங்காய், கொப்பரை போன்றவை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தேங்காய்க்கு போதிய விலை இல்லாதது; வறட்சி, நோய் தாக்குதல் போன்ற காரணங்களினால் தென்னை விவசாயிகள் மீளாத்துயர் அடைந்தனர்.

கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், கொப்பரை கிலோ, 150 ரூபாய் கடந்துள்ளது. தற்போது சீசன் இல்லாத சூழலில், தேங்காய், கொப்பரை, மதிப்புக்கூட்டப்பட்ட பொருளான தேங்காய் எண்ணெய், தேங்காய் பவுடர் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது.

காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி, ஒரு டின், 3,120 ரூபாயும், ஒரு கிலோ பவுடர், 265 ரூபாய், ஒரு கிலோ முதல் தர கொப்பரை, 150 ரூபாயுக்கும், இரண்டாம் தர கொப்பரை, 146 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு டன் முதல் தர தேங்காய் (கறுப்பு) 64,000 ரூபாய்க்கும், இரண்டாம் தர (பச்சை) தேங்காய், 60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்னை விவசாயிகள் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது சீசன் மார்ச் மாதம் தான் துவங்கும். தற்போது வரத்து இல்லாத சூழலில், விலை உயர்ந்து வருகிறது.

கொப்பரை, தேங்காய், தேங்காய் எண்ணெய், பவுடர் உள்ளிட்டவற்றின் விலை வேகமாக உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதே நேரத்தில், போதியளவு இருப்பு இல்லாததால், விலை உயர்ந்தும் முழு பலன் கிடைக்காத நிலை உள்ளது. ஒரு புறம் கேரளா வேர் வாடல் நோய் வந்து, மரங்களை அழிக்கிறது. ஒரு புறம் வெள்ளை ஈ தாக்குதால், காய் எடை குறைகிறது.

இதுபோன்ற நெருக்கடியான சூழலில் விலை உயர்வு என்பது மனதுக்கு இதம் அளிக்கிறது. இந்த விலை உயர்வு சீசன் மாதமான மார்ச்சிலும் தொடர்ந்தால் முழு பயன் பெற முடியும். இனி விலை குறையாது; உயரும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.