பொள்ளாச்சி: அரசு பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் செய்தால், ‘எல்லாம் சரியாக முடிக்கப்பட்டது,’ என, பள்ளித் தலைமையாசிரியரின் ஒப்புதல் கையொப்பம் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அதிகப்படியான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
அதன்படி, ஒவ்வொரு கல்வியாண்டும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால், கூடுதலாக வகுப்பறைகள், கழிப்பறை, குடிநீர் கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன.
அதற்கேற்ப பல பள்ளிகளில், அதற்கான மேம்பாட்டுப்பணி மேற்கொள்ளவும் திட்டமிடப்படுகிறது. அவ்வகையில், அந்தந்த பள்ளித்தலைமையாசிரியர், பொதுப்பணித்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பள்ளிகளில் நேரில் ஆய்வு நடத்தி, திட்ட மதிப்பீடு தயாரித்து, நிதி ஒதுக்கீடு பெற்று, பணிகள் மேற்கொள்கின்றனர்.
ஆனால், பணிகள் சரிவர பூர்த்தி செய்யப்படாமலேயே, ஒப்பந்ததாரருக்கு பணிக்கு உண்டான முழுத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமையாசிரியர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
இதனைத்தடுக்க, எந்தவொரு மேம்பாட்டு பணிகள் செய்தாலும், ‘எல்லாம் சரியாக முடிக்கப்பட்டது,’ என்ற தலைமையாசிரியரின் ஒப்புதல் கையொப்பம் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறுகையில், ‘பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள், முழுமையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை. அதற்கு முன்னதாக பில் தொகையை கேட்டுப் பெறுகின்றனர். இதனைத்தடுக்க, பணிகள் முழுமையாக முடித்தமைக்கான தலைமையாசிரியரின் ஒப்புதல் கையொப்பம் பெற்ற பின்னரே பில் வழங்கும் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும்,’ என்றனர்.